புதிய சாதனை: நேற்று ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

நேற்று ஒரே நாளில் ஆன்லைன் மூலம் (ஆக. 31) மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி
புதிய சாதனை: நேற்று ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

புதுதில்லி: நேற்று ஒரே நாளில் ஆன்லைன் மூலம் (ஆக. 31) மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

 கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆக.31 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மேலும் ஒரு மாதத்துக்கு (செப்.30 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், வருமான வரி தாக்கல் செய்வோரிடையே குழப்பம் ஏற்பட்டது.

 இதுகுறித்து மத்திய நேரடி வரி வாரியம் (சிபிசிடி) விளக்கம் அளித்தது. வருமான வரி தாக்கல் செய்யும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வருமான வரிக் கணக்கை ஆகஸ்ட் 31-க்குப் பிறகு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தது. மேலும், தாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்கள், அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019-2020-க்கான வருமான வரிக் கணக்கை நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் ஆன்லைன் மூலம் (ஆக. 31) மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் இத்தனை பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளது இதுவே முதல் முறை என்றும், உலகில் வேறு எங்கும் ஒரே நாளில் இவ்வளவு பெரிய ஆன்லைன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 2.05 லட்சம் பேரும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 8,500 பேரும், விநாடிக்கு 142 பேரும் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்துள்ளனர். வரி செலுத்துவோரில் சுமார் 2.86 கோடி போர் (79 சதவீதம்) ஆன்லைன் சரிபார்ப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், பெரும்பாலும் ஆதார் ஓடிபியையே பயன்படுத்தி உள்ளனர். 

இத்தனை பேர் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போதும் சர்வர் 'ஹேங்' ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை தாக்கல் செய்த 5.65 கோடி வருமான வரிக் கணக்குகளில் 3.61 கோடி வருமான வரிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்று வாரியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com