இந்த ஆண்டு 28 லட்சம் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் காமராஜ் தகவல்

நடப்பாண்டில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்  என்று உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 28 லட்சம் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் காமராஜ் தகவல்


கூத்தாநல்லூர்:  நடப்பாண்டில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்  என்று உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் பணியாற்றும் 75 தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை அவர் வழங்கினார்.

நகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி தலைமை வகித்தார். வட்டாட்சியர் தெய்வநாயகி முன்னிலை வகித்தார். ஆணையர் லதா ராதாகிருஷ்ணன் வரவேற்றார். 

நிகழ்ச்சியில், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்றிருந்த 75 தூய்மைப் பணியாளர்களுக்கு, அத்தியாவசியப் பொருள்களை அமைச்சர் இரா. காமராஜ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தி வருகிறது. அந்த அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட வேண்டும். அதற்கு ஒரே வழி. தனிமையில் இருப்பதுதான் ஒரே வழி. கரோனா தொற்றில் நாம் 3-வது கட்டத்திற்குச் செல்லாமல் இருப்பது பெரிய விஷயம். திருவாரூர் மாவட்டத்தில் யாருக்கு வைரஸ் தொற்று இருந்தது எனக் கண்டறியப்பட்டதோ, அவர்கள் தொடர்புடையவர்கள், அவர்களின் குடும்பத்தாருக்குத்தான் தொற்று வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு செய்யப்பட்டதில் 3-வது கட்டத்திற்கு செல்லாமல் இருப்பது நாம் அனைவருக்கும் நல்லதுதான். 

முதல்வரின் தொடர் நடவடிக்கைகளால், மக்களிடையே முன்பைவிட, கூடுதலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கரோனா நிவாரணம் ரூ.1000, 98.35 சதவீதம் பேருக்கும், அங்காடி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் 94 சதவீதத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 12 லட்சத்து 70 ஆயிரத்து 712 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மறு ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகான மே மாத ரேஷன் பொருட்களை வழங்கும் தேதி பின்னர் முதல்வரால்  அறிவிக்கப்படும்.

விவசாயப் பொருள்கள் விற்பதிலும், வாங்குவதிலும் எந்தவிதத் தடையும் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தையும் தொடரச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. சில இடங்களில் நடைபெற்றும் வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 21 லட்சத்து 40 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவது இந்த ஆண்டுதான். 

ஊரடங்கு அறிவித்துள்ள இந்த நாளிலும், அதாவது மார்ச் 24 முதல், ஏப்ரல் 21 வரை, ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பில் உள்ள 3 லட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன்னில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் எடுக்கப்பட்டு, அரைவைக்காக வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

மக்களுக்காக மிகக் குறைந்த விலையிலான உணவுகளை அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு அம்மா உணவகம் உயர்ந்துள்ளன. இந்த உணவகத்தில், கரோனா காலத்தில் அந்த குறைந்த அளவிலான பணத்தையும் கொடுத்து சாப்பிட முடியாதவர்களுக்கான பணத்தை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கலாம் என முதல்வர் சொன்னதன் நல்ல எண்ணத்தில்தான், அம்மா உணவகத்திற்கான முழுப் பணத்தையும் நாங்களே கொடுத்து விடுகிறோம். 

திருவாரூர்  மாவட்ட அம்மா உணவகத்திற்கான ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 300 கொடுத்துவிட்டேன். இது மக்கள் இயக்கம், மக்களின் பிரச்னையை ஓடிச் சென்று செய்வோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

நிறைவாக, நகராட்சிப் பொறியாளர் ராஜகோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் எல்.எம். முகம்மது அஷ்ரப், அதிமுக நகரச் செயலாளர் டி.எம். பஷீர் அஹம்மது, நகர துணைச் செயலாளர் எம்.உதயகுமார், எம்.ஜி.ஆர். மன்ற நகர துணைச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com