ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்கிய மஞ்சள் ஏலம்: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊரடங்கால் 32 நாள்களுக்குப்பின் ஈரோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் துவங்கியதால் விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர்.
ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்கிய மஞ்சள் ஏலம்: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி


ஈரோடு: ஊரடங்கால் 32 நாள்களுக்குப்பின் ஈரோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் துவங்கியதால் விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர்.

ஈரோட்டில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கங்கள் என நான்கு இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கும். கரோனாவுக்கான ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதி மஞ்சள் ஏலம் இறுதியாக நடந்தது.

தற்போது சில தளர்வுகளால் மாநகருக்கு வெளியே என்ற முறையில், பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு அடுத்த செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஏலம் நடந்தது. அடையாள அட்டை பெற்றிருந்த கிடங்கு உரிமையாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சுமைப்பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.

அரசு விதிப்படி நடந்த ஏலத்தில் 28 மாதிரிகளில் 379 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில் 182 மூட்டைகள் விற்பனையானது. விரலி குவிண்டால் ரூ. 6,119 முதல் ரூ.6,810 வரையிலும், கிழங்கு குவிண்டால் ரூ.5,809 முதல் ரூ.6,286 வரையிலும் விற்பனையானது.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி நடந்த ஏலத்தில் 662 மாதிரிகளில் 5,911 மூட்டை விற்பனைக்காக வந்தது. இதில் 3,157 மூட்டை விற்பனையானது. விரலி குவிண்டால், ரூ.5,599 முதல் ரூ.7,788 வரையிலும், கிழங்கு ரூ.5,322 முதல் ரூ.6,569 வரையிலும் விற்பனையானது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:  அரசு விதிப்படி சமூக இடைவெளி விட்டு, மாதிரிகள் வைத்து ஏலம் நடந்தது. முதல் நாளில் உற்சாகமாக விவசாயிகள், வியாபாரிகள், கிடங்கு உரிமையாளர்கள் ஏலம் கோரினர். கடந்த மாத ஏலத்தை ஒப்பிடுகையில் விலையில் பெரிய மாற்றம் இல்லை. புதிய மற்றும் பழைய மஞ்சள் வந்தது.

கடந்த மாதங்களில் அனைத்து மாவட்ட வியாபாரிகள், கர்நாடகம் உட்பட சில மாநில வியாபாரிகளும் பங்கேற்றனர். தற்போது கட்டுப்பாடுகள் உள்ளதால், மாவட்டத்துக்குள்ளான வியாபாரிகள் மட்டும் பங்கேற்றனர். வரும் நாட்களில் மஞ்சள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றார்.

முன்னதாக கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

முதல் நாள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட விற்பனை குழு சிறப்பு அதிகாரி சண்முகசுந்தரம், துணை இயக்குநர் சின்னசாமி உட்பட பலர் பார்வையிட்டனர்.

பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 24 டன் மஞ்சளும், ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 30 டன் மஞ்சளும் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com