மூணாறு நிலச்சரிவில் ஏஜமானரை இழந்த செல்லப்பிராணி மோப்ப நாய் படையில் சேர்ப்பு

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் தனது எஜமானர் குடும்பத்தை இழந்து, அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லப் பிராணி, கேரள காவல் துறை மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மூணாறு நிலச்சரிவில் ஏஜமானரை இழந்த செல்லப்பிராணி மோப்ப நாய் படையில் சேர்ப்பு
மூணாறு நிலச்சரிவில் ஏஜமானரை இழந்த செல்லப்பிராணி மோப்ப நாய் படையில் சேர்ப்பு

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் தனது எஜமானர் குடும்பத்தை இழந்து, அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லப் பிராணி, கேரள காவல் துறை மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 1.30 மணிக்கு கன மழையால் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் தங்கியிருந்த உறவினர்கள் என 82 பேர் சிக்கினர். இதில், தற்போது வரை உயிரிழந்த நிலையில் 65 பேரின் சடலங்களும், படுகாயமடைந்த நிலையில் 12 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானர் பிரதீஷ்குமார்(வயது 32) என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது செல்லப் பிராணியான புவி என்ற நாய், மீட்பு படையினருடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டது. இதில், பிரதீஷ்குமார், அவரது மகள் தனுஷ்கா (2) ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பிரதீஷ்குமாரின் மனைவி கஸ்தூரி, மற்றொரு மகள் பிரியதர்ஷினி ஆகியோரின் சடலங்கள் தற்போது வரை மீட்கப்படவில்லை.

இந்த நிலையில், தனது எஜமானரின் குடும்பத்தைத் தேடி செல்லப் பிராணியான புவி, நிலச் சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி, அருகே உள்ள பெட்டிமுடி ஆறு ஆகிய பகுதிகளில் மீட்பு படையினருடன் சேர்ந்து தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டது. புவியின் மோப்ப சக்தி உதவியுடன், பிரதீஷ்குமார் குடும்பத்தினரின் சடலம் மட்டுமின்றி, நிலச் சரிவில் சிக்கி புதையுடண்ட ஏனைய தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

கடந்த 15 நாட்களாக பசி நோக்காது, கண் துஞ்சாது, சீதோஷன நிலையை பொருட்படுத்தாது தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட புவியின் அயராத உழைப்பு, மீட்பு படையினர் மற்றும் கேரள காவல் துறை மோப்ப நாய் படை பிரிவினரை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த நிலையில், புவியின் மோப்ப சக்தி, சலிக்காத தேடுதல் ஆகியவற்றை அறிந்த கேரள காவல் துறை மோப்ப நாய் படைப் பிரிவு பயிற்றுநர் அஜித் மாதவன், புவியை காவல் துறை மோப்ப நாய் படைப் பிரிவில் சேர்க்க பரிந்துரைந்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று இடுக்கி மாவட்ட காவல் துறை புவியை மோப்ப  நாய் படை பிரிவில் சேர்க்க அனுமதி அளித்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவத் துறையினரின் பரிசோதனைக்குப் பின், தேவிகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்தின் முன்னிலையில், புவி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல் துறை மோப்ப நாய் படைவில் புவிக்கு முறையான பயிற்சி அளித்து, அதன் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று காவல் துறை மோப்ப நாய் படை பிரிவினர் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com