இந்தியாவில் இயற்கைச் சீற்றங்களுக்கு 2,038 பேர் பலி

வறட்சி, காட்டுத் தீ, வெள்ளம், நிலச்சரிவுகள், கடுமையான வெப்பம், புயல்கள் மற்றும் மூடுபனி உள்ளிட்ட நிகழ்வுகள்...
இந்தியாவில் இயற்கைச் சீற்றங்களுக்கு  2,038 பேர் பலி



2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த வானிலை  இயற்கைச் சீற்றங்களுக்கு 2,038 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  2019 இல் இயற்கைச் சீற்றங்கள் குறைவாக இருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகமாகவே நிகழந்துள்ளன. 

தேசம் முழுவதும் சமீப காலமாக பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் "இந்தியாவின் சுற்றுச்சூழல் 2020" என்ற தலைப்பில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 23 தீவிர இயற்கைச் சீற்றங்களும், 2019 ஆம் ஆண்டு 9 தீவிர இயற்கைச் சீற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக 2018 இல் 1,396 பேரும், 2019 இல் சுமார் 2,038 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வறட்சி, காட்டு தீ, வெள்ளம், நிலச்சரிவுகள், கடுமையம் வெப்பம், புயல்கள் மற்றும் மூடுபனி உள்ளிட்ட நிகழ்வுகள் தீவிர இயற்கைச் சீற்றங்கள் ஆகும். அதன்படி, உலகயளவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 286 இயற்கைச் சீற்றங்களும், 2019 ஆம் ஆண்டு 228 தீவிர இயற்கைச் சீற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இதில், இந்தியாவில் முறையே 23 மற்றும் 9 தீவிர இயற்கைச் சீற்றங்கள்  நிகழ்ந்துள்ளது. 

உயிரிழப்பு அதிகரிப்பு:  2018 இல் நிகழ்ந்த 23 தீவிர இயற்கைச் சீற்றங்களுக்கு 1396 பேர் உயிரிழந்த நிலையில், 2019 இல் குறைந்த அளிவிலான தீவிர இயற்கைச் சீற்றங்களுக்கு 2,038 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர இயற்கைச் சீற்றங்கள் குறைவு என்றாலும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளிலும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஒரு தீவிர இயற்கைச் சீற்றம்  நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மாதத்திலிருந்து இன்னொரு மாதத்திற்கு தீவிர இயற்கைச் சீற்றங்களின் தொடர்ச்சியானது, உலகம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுவதாகவும், விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை ஒரு சூழல் அவசரநிலை என்று கோடிட்டு காட்டியுள்ளதால் மேலும் தேவை விழிப்புணர்வே. 

"இந்தியாவின் வடக்கே மிகக் குளிரான மற்றும் வறண்ட குளிர் காணப்பட்டது. இதற்கு பிப்ரவரி வரை நீடித்த தீவிர வானிலை மாற்றங்களே காரணம். மார்ச் மாதத்தில் நிலவிய, பருவ காலமற்ற கடுமையான வெப்பம் தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கேரளத்தை வறுத்தெடுத்தது. ஏப்ரல் மாதத்தில், மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய பெய்த கனமழை இந்தியாவின் கிழக்கு, மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இதுவொரு அரிய புயல் மழையாக பெய்து அந்த மாதம் முடிந்தது.

இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்கள் கடுமையான வெப்ப அலைகளை சந்தித்தது. அதில், "ஜூன் முதல் வாரத்தில், 73 வெப்ப அலைகளை சந்தித்ததாகவும், அவற்றில் 11  வெப்ப அலைகள் தீவிரமானது. இதில் பிகாரில் அதிகபட்சமாக 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை இரண்டாவது வாரத்தில் பன்னிரண்டு மாநிலங்களில் 60 சதவீதம் உபரியாக மழை பெய்தது. இதன் விளைவாக பிகார் மற்றும் அசாமில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர், 168 பேர் உயிரிழந்தனர். உபரி மழையின் பாதிப்புகள் செப்டம்பர் வரை தொடர்ந்தது. மொத்தத்தில், 1,250 கன மழை பெய்ததாகவும், ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

பின்னர் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அரபிக் கடலில் உருவான ஹிகா, கியார், மஹா புயல்கள், வங்காள விரிகுடாவில் உருவான புல்புல், டிசம்பரில் உருவான பவன் புயல் என அடுத்தடுத்து தீவிரமடைந்தன. தொடர்ச்சியாக வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் 8 புயல்கள் வரிசை கட்டின. 1976-க்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் இது என்றும், 2019 இல் 44 சதவீதம் பற்றாக்குறையுடன் வடகிழக்கு பருவமழை முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மூன்றாவது மிக அதிகளவிலான பற்றாக்குறை இதுதான் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com