விவசாயியைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பச்சைத் துண்டு போடுவதற்கும் தகுதி வேண்டும். அது விவசாயிக்கு மட்டுமே உள்ளது என்றார் முதல்வர்.
விவசாயியைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தஞ்சாவூர்: விவசாயியைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

தஞ்சாவூரில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எப்போதும் என்னுடைய நினைவுதான் இருக்கிறது. நாம் விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே நமக்கு விளம்பரம் கொடுக்கிறார். அவர் என்னை பேசாத நாள் கிடையாது. 

அதுவும் விவசாயி என்றால் என்னவென்றே தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்கிறார்.

நான் என்ன செய்யமுடியும்? நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில். எனது குடும்பம் விவசாயக் குடும்பம். அதை விவசாயி என்றுதானே சொல்ல முடியும். இங்கு வந்துள்ள அத்தனை பேரும் விவசாயிகள்தான். உங்கள் முகத்தில் மலர்ச்சியை பார்க்க முடிகிறது.

விவசாயி என்று சொன்னாலே பெருமைதான். அடுத்தவனிடத்தில் கையேந்தாதவர்கள் விவசாயிகள். தனது உழைப்பால் உயர்ந்து நிற்கும் ஒரே மனிதர் விவசாயிதான். மற்றவர்களை நம்பி வாழக்கூடியவர்கள் அல்லர்.

விவசாயிதான் தன் சொந்தக் காலில் நிற்பவர். அவ்வாறு சொந்தக்காலில் நின்று வாழ்கிறவர்களை எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது.

விவசாயி உழைப்பதற்காகவும் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்காகவும் பிறந்தவர்கள். மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைப்பவர்கள் விவசாயிகள். தயவுசெய்து விவசாயியைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

பச்சைத் துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியாது என கூறுகிறார் ஸ்டாலின். பச்சைத் துண்டு போடுவதற்கும் தகுதி வேண்டும். அது விவசாயிக்கு மட்டுமே உள்ளது என்றார் முதல்வர்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தலைவர் ஜி.கே. வாசன், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com