தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் கரோனா பாதிப்பு 162 வரை உயர வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் மாத இறுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 162 வரை உயர வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் கரோனா பாதிப்பு 162 வரை உயர வாய்ப்பு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் மாத இறுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 162 வரை உயர வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று முதல் முதலாக மார்ச் 28 -ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்திலிருந்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்துதான் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

கடந்த ஒரு மாதமாக சென்னை, வெளி மாநிலம், அயல் நாடுகளிலிருந்து வருபவர்களிடம் கரோனா தொற்று இருப்பது தெரிய வருகிறது. 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 17,752 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 17,262 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 424 பேர் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 88 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஏப். 16-ஆம் தேதி முதல் வெவ்வேறு நாள்களில் 76 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சமூகப் பரவல் இல்லாததால், பாதிப்பு எண்ணிக்கை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) எஸ். மருதுதுரை தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வளர்ச்சி விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஜூன் மாத இறுதியில் கரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 162 வரை உயர வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப சிகிச்சை மையங்கள், படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கைகள் தயாராக இருக்கின்றன. 
இம்மருத்துவமனையில் இதுவரை கரோனா சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் யாருக்குமே ஆக்ஸிஜனோ, சுவாசக் கருவிகளோ தேவைப்படவில்லை. அந்த அளவுக்குப் பாதிப்பின் வீரியம் இல்லை. என்றாலும், 118 சுவாசக் கருவிகள் கையிருப்பில் உள்ளன. ஆனால், அனைவரும் முகக்கவசம் அணிதல், கைக்கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால், கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

குணமடைபவர்கள் அதிகம்: மாநில அளவில் குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.4 சதவீதமாக உள்ளது. இம்மருத்துவமனையில் குணமடைபவர்களின் விகிதம் 85 சதவீதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவுகள் அறிவிப்பதில் முன்னிலை: இம்மருத்துவமனையில் ஏப். 13 -ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும். இந்த ஆய்வகத்தில் நாள்தோறும் சராசரியாக 400 முதல் 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இம்மருத்துவமனையில் பரிசோதனை முடிவு விரைவாக அறிவிக்கப்படுகிறது. கரோனா பரிசோதனை முடிவு அறிவிப்பதில் மாநில அளவில் சராசரியாக 3.4 நாள்களாக உள்ளது. ஆனால், இம்மருத்துவமனையில் சராசரியாக 1.4 நாளில் முடிவு அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாநில அளவில் விரைவாக முடிவுகள் அறிவிப்பதில் இம்மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது என்றார் மருதுதுரை.

கர்ப்பிணிகளுக்காகத் தனிப் பிரிவு: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் எப்போதும் போல மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வரும் கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், இதுவரை 29 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 20 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகப் பரவல் இல்லை: மாவட்டத்தில் கடந்த 29 நாள்களில் பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மேல கபிஸ்தலத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மற்றவர்கள் சென்னை, வெளி மாநிலம், அயல்நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத்தான் கரோனா தொற்று உறுதியாகிறது.

எனவே, மாவட்ட எல்லைகளில் நுழைபவர்களுக்கு கரோனா பரிசோதனை முழு வீச்சில் செய்யப்படுகிறது. இதன் மூலம், மாவட்டத்தில் சமூகப் பரவல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com