தனிப்பட்ட விமர்சனங்களுக்காக பணியை கைவிடமாட்டேன்: டெட்ரோஸ் அதானோம்

தனிப்பட்ட விமர்சனங்களுக்காக பணியை கைவிடமாட்டேன்: டெட்ரோஸ் அதானோம்

என் மீது தனிப்பட்ட  விமர்சனங்கள் வந்தாலும் நான் இந்த பணியை கைவிடமாட்டேன் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறினார்.


ஜெனீவா: என் மீது தனிப்பட்ட  விமர்சனங்கள் வந்தாலும் நான் இந்த பணியை கைவிடமாட்டேன் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறினார்.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) விவகாரத்தில் தங்களுக்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உரிய நேரத்தில் தகவல்கள் அளிக்காததால் அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதிகமான சவப்பெட்டிகளை சுமக்க விரும்பவில்லை என்றால் தயவு செய்து கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 795 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுக்குள்கொண்டுவர தொடர்ந்து போராடி வருகின்றனர். கரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவில் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. 

இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் தங்களுக்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உரிய நேரத்தில் தகவல்கள் அளிக்காததால் அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை முடக்கப்போவதாக எச்சரித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் நேரடியாக பதிலளித்துள்ளார். 

இது குறித்து ஜெனீவாவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா நோய்த்தொற்று மிகத் தீவிரமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை விரட்டியடிக்க உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம். சீனாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த ஆபத்தான நோய்த்தொற்றை விரட்டியடிக்க முடியும். 

நான் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் நோய்த்தொற்றில் உங்கள் மக்களை காப்பற்ற வேண்டும், தயவுசெய்து இந்த கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். 

நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லை என்றால், தயவுசெய்து கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்குவதைத் தவிர்த்திடுங்கள். இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு. இதனை தணிப்பதற்கு தேசத்தின் ஒற்றுமைதான் மிக முக்கியமானது. 

நோய்த்தொற்றை விரட்டியடிக்க ஒற்றுமை மட்டுமே ஒரே வழி. இந்த உலகிற்கு இரு வழிகளை நான் பரிந்துரைக்கிறேன். முதலில் தேசிய ஒற்றுமை, இரண்டாவது உலகளாவிய ஒருமைப்பாடு. ஒரு நாட்டிள் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து நாட்டின் நலனுக்காக, மக்களுக்காக ஒன்று சேருங்கள். மக்களுக்கான அரசியல்  செய்யாமல், அரசியல், கொள்கைகளைக் கடந்து பணியாற்றுங்கள்.

ஒற்றுமை இல்லாவிட்டால், எந்த நாடும், எவ்வளவு சிறப்பான வசதிகள் பெற்றிருந்தாலும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது அது மேலும் மேலும் சிரமத்தை மட்டுமே கொடுக்கும்.

நாங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நாங்கள் இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம்.

கரோனா வைரஸ் போன்ற ஒரு புதிய மற்றும் தீவிரமான நோயை எதிர்கொள்ளும்போது இந்த அமைப்பு ஒரு நடவடிக்கைக்குப் பிறகு மதிப்பீடு செய்கிறது. அதன் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண எங்கள் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம். உலக சுகாதார அமைப்பு நோய்த்தொற்றில் இருந்து உயிரிழப்புகள் குறைந்து வரும் செய்தியை படிக்க விரும்புவதாக கூறியவர், உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி பேசினார். 

மேலும், என் மீது தனிப்பட்ட  விமர்சனங்கள் வந்தாலும் நான் இந்த பணியை கைவிடமாட்டேன். ஒரு நீக்ரோ, கறுப்பினத்தவர் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன். என்னை நீக்ரோ, கறுப்பினத்தவர் என்று சிலர் விமர்சிப்பதை நான் கருத்தில்கொள்ளமாட்டேன்.

உலகில் உள்ள கறுப்பின சமூகத்தினர் அவமதிக்கப்படும் போது, ஆப்பிரிக்க மக்கள் அவதிக்கப்படும் போது நான் தாங்கிக்கொள்ளமாட்டேன். ஆப்பிரிக்க மக்கள் மீதும், மண்ணின் மீது ஒருபோதும் தடுப்பூசிகளை சோதனை செய்வதை அனுமதிக்கமாட்டேன் என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com