முகப்பு தற்போதைய செய்திகள்
சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd August 2020 05:47 PM | Last Updated : 03rd August 2020 05:47 PM | அ+அ அ- |

சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூரில் வாகன ஓட்டுநர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற ஓட்டுநர்கள் கூறியதாவது:
கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகவே, சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் 2 முறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போதைய சூழலில் அனைத்து தொழில்களுக்கும் 75 சதவீத அனுமதி அளித்தும், சுற்றுலா வாகனங்களை இயக்க மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. அதே வேளையில், இ-பாஸ் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்தும் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதிலும் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் வாகன ஓட்டுநர்களுக்கு இ-பாஸ் அனுமதி தாமதிக்காமல் வழங்க வேண்டும். வாகன கடனுக்கு நிதி நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். வாகன தகுதி சான்று, பர்மிட் பெறுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கிறோம் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.