டிச.30-ல் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு அழைப்பு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பாக டிசம்பர் 30-ல் பேச்சுவார்த்தை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பாக டிசம்பர் 30-ல் பேச்சுவார்த்தை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 33 நாள்களாக போராடி வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஐந்து முறை பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. 3 புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற்ற பின்னரே அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன. இருந்தபோதும், விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மத்திய அரசு சாா்பில் தொடா்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கான தேதியை விவசாய சங்கங்கள் முடிவு செய்து அறிவித்தால், அவா்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிவித்தாா்.

அதற்கு, ‘திறந்த மனதுடன் உறுதியான திட்டத்துடன் மத்திய அரசு முன்வந்தால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்’ என்று விவசாய சங்கங்கள் கடந்த புதன்கிழமை அறிவித்தன.

அதனைத் தொடா்ந்து, விவசாய சங்கப் பிரதிநிதிகளை மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, அதுதொடா்பாக கடிதம் ஒன்றையும் விவசாய சங்கங்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியது. அதில், ‘புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அதுதொடா்பாக பிரச்னை எழுப்புவதில் அா்த்தமில்லை. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என எழுத்துபூா்வமாக உறுதியளிக்கவும் தயாா்’ என்று அந்தக் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்தச் சூழலில், சம்யுக்த கிஸான் மோா்ச்சா சாா்பில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அதில், மத்திய அரசுடன் செவ்வாய்க்கிழமை (டிச.29) மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது என்று விவசாய சங்கங்கள் முடிவெடுத்தன.

ஆனால், மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை(டிச.30) மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com