எந்த வகுப்புகளுக்குத் தேர்வு என முதல்வரே முடிவு செய்வார்: கே.ஏ.செங்கோட்டையன்

ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாம் என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன்

கோவில்பட்டி: ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாம் என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி, தொடக்கப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்ற பின், தமிழக பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் மேலும் பேசியது:  

ஆன்மீகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்கிற அரசாக அதிமுக அரசு உள்ளது. மத நல்லிணக்கம் என்ற முறையில், அனைவரையும் அரவணைத்துச் செல்கிற முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கிற மக்களுக்கு தேவை சிறந்த கல்வி, வேலை வாய்ப்பு. அதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாநிலம், நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்குகின்றனர். இன்னும் 6 மாத காலத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. 7.5  சதவீத உள்இடஒதுக்கீடு காரணமாக, அரசுப் பள்ளியில் பயின்ற 405  மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இது ஏழை மாணவர்களுடைய கனவு. அந்த கனவை நிறைவேற்றும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார்.

ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாம் என்பதை கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார். 10  மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் 10  தினங்களுக்குள் முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் புதிய அட்டவணை அறிவிக்கப்படும்.

கரோனா தொற்று காரணமாக 100  சதவீத பாடத்தை நம்மால் எடுத்துச் செல்ல முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க இயலவில்லை. பள்ளிகள் திறக்கும் நாள் குறைந்துகொண்டே இருக்கின்ற காரணத்தின் அடிப்படையில், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து, அதில் உள்ள சாராம்சங்களைக் கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துக்களை அறிந்து அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் அதற்கான அட்டவணை வெளியிடப்படும்.
தனியார் நடுநிலைப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சில மாதங்களாக நிலுவையில் உள்ளது என்பது குறித்து கேட்டதற்கு, இதுவரை எனது கவனத்துக்கு எந்த தகவலும் வரவில்லை. பள்ளிகளை நடத்தக் கூடியவர்கள் இதுபோன்ற கருத்துக்களை என்னிடம் சொல்லவில்லை. அவ்வாறு நிலுவையில் இருக்குமேயானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மயிலாடுதுறையில் தனியார் கடையில் தமிழக அரசன் இலவச புத்தகங்ள் ஆயிரக்கணக்கில் இருந்தது குறித்து கேட்டதற்கு,  விற்பனை செய்வதற்கு கூட அவர்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து வாங்கி வைத்திருக்கலாம். யார் வேண்டுமானாலும் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திடம் பணம் கட்டி பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதுகுறித்து காவல் துறை மூலம் விசாரணை நடந்து வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையைப் பொறுத்துதான்,  10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.  

நீட் தேர்வு பயிற்சியைப் பொறுத்தவரை, தற்போது வரை 28,150   பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 5,020  பேருக்கு ஆன்லைன் வழியாக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்1 பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். ஆனால் கரோனா பொதுமுடக்கம் காரணமாக தடைபட்டது. பென்டிரைவ் மூலம் ஸ்மார்ட் வகுப்பு வழியாக அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்பது 2ஆவது முயற்சி.
இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி என்ற திட்டத்தின் மூலம் மேல்நிலைப் பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்துப் பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சியளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

பேட்டியின்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com