கொவைட்-19  வைரஸுக்கு 1,716  மருத்துவ பணியாளா்கள் பாதிப்பு

கொவைட்-19  வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,526 ஐ எட்டிய நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில்
கொவைட்-19  வைரஸுக்கு 1,716  மருத்துவ பணியாளா்கள் பாதிப்பு


பெய்ஜிங்: கொவைட்-19  வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களில் 1,716 பேருக்கு, அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக கடந்த மாத இறுதியில் அறிவித்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

இந்த நிலையில் கொவைட்-19  வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,526 ஐ எட்டிய நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களில் 1,716 பேருக்கு, அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் அந்த வைரஸுக்கு இதுவரை 6 மருத்துவப் பணியாளா்கள் பலியானதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 

ஹூபே மாகாணத்தில் வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களில் 1,502 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,102 பேர் மாகாண தலைநகரான வூஹானில் உள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் ஜிங் கூறினார். மருத்துவமனை முழுவதும் அல்லது சமூகத்திற்குள் நோய்த்தொற்றுகள் பரவுகின்றனவா என்பதை அறிய ஆராய்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் பேராசிரியர் பெஞ்சமின் கோவ்லிங், வூஹானில் வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். 

ஹூபேயில் உள்ள மருத்துவ பணியாளர்களில், ஏற்கெனவே கடிகாரம் போன்று சுற்றி சுற்றி வேலை செய்கிறார்கள், அவர்கள் முகமூடிகள், கவுன்கள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் நண்பர்களிடமிருந்து பிச்சை எடுப்பது ஒவ்வொன்றை கேட்டு பெற்று வருகின்றனர். அடிக்கடி கேட்டும் கிடைக்காத நிலையில்,  கிழிந்த முகமூடிகள் மற்றும் கவுன்களை டேப்பைப் கொண்டு ஒட்டி பயன்படுத்தி வருகின்றனர்.  பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு நாளைக்கு ஒரு உணவை மட்டுமே சாப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் ஓய்வறைக்குச் சென்றால் அடுத்து அவர்கள் அணிவதற்கு பாதுகாப்பு  ஆடைகளை இல்லை. 

இதனிடையே, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஹாங்காங் அரசு ரொக்க மானியங்களை அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு அமெரிக்க-சீனா வர்த்தகப் போரும், பல மாதங்களாக ஜனநாயக சார்பான ஆர்ப்பாட்டங்களும் வணிக நிறுவனங்களின் பொருளாதாரத்தை பெரும் பின்னடைவுக்கு தள்ளியது.

இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு அந்த பின்னடைவை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, பல சிறு வணிகங்களை திவால் நிலைக்கு தள்ளியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com