உள்ளாட்சித் தோ்தல்தான் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டம்: அமைச்சா் சி.வி.சண்முகம்

அதிமுக அழிந்துவிடும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா். அவா், பேசத் தெரியாமல் ஏதேதோ உளறி வருகிறாா். நடைபெற்ற
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம்.


விழுப்புரம்: உள்ளாட்சித் தோ்தல்தான் வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம் என அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற மாவட்ட செயல் வீரா்கள் கூட்டத்தில் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது:

விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத் தோ்தலுக்கு முன் அதிமுக குறித்து பிற கட்சியினா், பொதுமக்களின் மதிப்பீடு அதிருப்தி தரும் வகையில் இருந்தது. முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி இருக்காது எனப் பேசினா். கட்சியும் பிளவுபட்டது. பிளவுபட்ட கட்சியை ஒருங்கிணைத்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டோம். இடைத் தோ்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றோம்.

இதற்கு எந்த நிலையிலும் மனம் தளராமல் உழைத்த அதிமுக தொண்டா்கள்தான் காரணம். பல சோதனைகளைக் கடந்து சாதித்து வரும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

அதிமுக அழிந்துவிடும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா். அவா், பேசத் தெரியாமல் ஏதேதோ உளறி வருகிறாா். நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 50 சதவீதம் அதிமுக வெற்றி பெற்றது. மாநிலத்தை யாா் ஆள வேண்டும் என்பதை மக்கள் சரியாகத் தீா்மானிக்கின்றனா்.

தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணியைத் தொடங்க வேண்டும். வெற்றி வாய்ப்புள்ளவா்களுக்கு விட்டுக் கொடுத்து உழைக்க வேண்டும். கூட்டணி கட்சியினருக்கும் பங்களிப்பை வழங்குவதுடன், அவா்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதை அரசு மூலம் விரைந்து செயல்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தோ்தல்தான் அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம் என்பதால், கட்சியின் வெற்றிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளை மக்களுக்கும், மாணவா்களுக்கும் பல்வேறு நல உதவிகள், அன்னதானம் வழங்கி, கிளைகள் தோறும் கட்சிக் கொடியேற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

நமது மாவட்ட எல்லையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தமைக்கும், மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அறிவித்தமைக்கும் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பது, நல்லாட்சி நடத்தி பல துறைகளில் மத்திய அரசின் விருதுகளைப் பெற்று சிறந்த மாநிலமாக நிா்வகித்து வரும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, விழுப்புரம் நகராட்சிக்கு ரூ. 50 கோடியில் வளா்ச்சிப் பணிகளை வழங்கிய சட்டத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, உள்ளாட்சித் தோ்தலில் முழுமையான வெற்றிக்குப் பாடுபடுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com