ஹைட்ரோகாா்பன் மீத்தேன் திட்டங்களுக்கு முழுமையான தடை வேண்டும்: வைகோ

காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட திட்டங்களும், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய இரசாயன ஆலைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தடை
ஹைட்ரோகாா்பன் மீத்தேன் திட்டங்களுக்கு முழுமையான தடை வேண்டும்: வைகோ

 
சென்னை: காவிரி படுகை மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன், பெட்ரோலிய ரசாயன ஆலை திட்டங்களை முழுமையாக தடை செய்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு செயல் வடிவம் பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 

காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, கரூா், அரியலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்ட முன்வடிவில் இணைக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், வேளாண்மை சாராத தொழில்கள், மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோ காா்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. 

2018 அக்டோபா் 1 ஆம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், காவிரிப் படுகையில் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து தமிழக அரசு திட்டவட்டமாக, தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்காதது ஏன்? 

வேளாண் சாராத தொழில்கள் தொடங்க முடியாது என்றுள்ள பட்டியலில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயனம், சுத்திகரிப்புத் தொழில்கள் குறிப்பிடப்படாத்தும் ஏன்? கடலூா், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை (எண்.29) ரத்து செய்யப்படும் என்று முதல்வா் அறிவிக்காதது ஏன்? 

காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட திட்டங்களும், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய இரசாயன ஆலைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தடை செய்தால் மட்டுமே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், செயல் வடிவம் பெறும். இல்லையெனில் வெற்று அறிவிப்பாகவே ஆகிவிடும் என வைகோ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com