Enable Javscript for better performance
'எதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்? - 'தில்' ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

  

  'எதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்? - 'தில்' ஜெயலலிதா

  By DIN  |   Published on : 24th February 2020 12:17 AM  |   அ+அ அ-   |    |  

  jayalalitha-18  திரை உலகில் ஜெயலலிதா கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்து, அந்தப் பேட்டி ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது. அதில் அவர், என்னை சிலர் கன்னட நாட்டிலிருந்து வந்தவள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். அது தவறான செய்தி நான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழ்ப்பெண். தமிழ்தான் என் தாய்மொழி; கன்னடமல்ல" என்று கோரியிருந்தார். அந்த செய்தி பெங்களூரில் உள்ள ஒரு பிரபல வார பத்திரிக்கையில் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரிய செய்தியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது

  அந்த சமயத்தில் மறைந்த பிரபல டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்கள் 'கங்கா கவுரி' என்ற படத்தை மைசூர் பிரீமியர் ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா, ஜெயந்தி, தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த படப்பிடிப்பை நேரில் காண்பதற்காக, மைசூருக்கு சென்றிருந்த சில பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன்.

  அன்று ஜெயலலலிதாவுக்கு ஒரு 'க்ளோசப்' ஷாட்; முதல் டேக் எடுத்து இரண்டாவது டேக் கூட எடுக்கவில்லை.அப்போது திபு திபு என்று, 'ஆய் ஊய்' என்று ஆவேச கூச்சல் போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட ஐநூறு பேர் கைகளில் தடி,கம்பு , அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் வெறிபிடித்தவர்களைப் போல, 'எங்கே அவள்? 'எங்கே அவள்? சும்மா விடக்கூடாது அவளை! பிடியுங்கள், பிடியுங்கள்!என்று ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.படப்பிடிப்பு நடக்கும் ப்ளோருக்குள் நுழைந்து அப்போது ஜெயலலிதாவை நோக்கி வந்தவர்களை தடுத்து நிறுத்திய டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்களை நோக்கி , ' என்ன சமாச்சாரம்? ஏன் இப்படி கலாட்டா பண்றீங்க? என்று கேட்டார். அதற்கு அவர்கள் , 'இவள் (ஜெயலலிதா) தமிழ்நாட்டைச் சேர்ந்தவள், கன்னடம்  தாய்மொழி இல்லை என்றும் சொல்லி இருக்கிறாள்.  அப்படி சொல்கிறவள் இங்கு இருக்கக் கூடாது. இல்லேன்னா மன்னிப்பு கேட்டுட்டு சொன்னதை மரியாதையா வாபஸ் வாங்கிக்கணும்' என்றார்கள்.

  வேறு யாராக இருந்தாலும் நிலைமையை சமாளிப்பதற்காகவாவது நிச்சயமாக மன்னிப்பு கேட்டிருப்பார்கள். அல்லது வேறு காம்ப்ரமைஸ் ஏதாவது பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவோ, 'நான் எதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்? சும்மா கலாட்டா பண்ணாதீங்க..! போய் வேலையை பாருங்க' என்றார். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ரகளை செய்யத் தொடங்கினார்கள்.  ஜெயலலிதாவை 'அசிங்கமான' வார்த்தைகளால் வாய்க்கு வந்தபடி திட்டத் தொடங்கினார்கள்.

  நான் ஜெயலலிதாவின் காதில் மெதுவாக. 'நீங்க ஸ்டூடியோவில் பசவராஜ் ஆபிசுக்குள்ள போய் அங்கு பாதுகாப்பா இருங்க!'  என்று கூறினேன்.

  'என்ன சார் பண்ணிடுவாங்க? சும்மா மிரட்டி பார்க்குறாங்க..இதுக்கெல்லாம் நான் பயப்படல என்றார்.சிலர் கோபவெறியுடன் அவரைக் கன்னடத்தில் திட்ட, அவர் பதிலுக்கு 'மரியாதையா பேசு' என்றுபதிலுக்கு பதில் பேசினார்.அதைத் தொடர்ந்து சில முரடர்கள் என்ன சொன்னே? என்று கத்தியவாறு  அவரை நோக்கி பாய்ந்து வந்தார்கள்.    

  உடனே நானும் மற்றவர்களும் ஜெயலலிதாவை சூழ்ந்து கொண்டு   எவரும் நெருங்காதவாறு பாதுகாப்பு கொடுத்தோம். போலீஸ் வந்த பிறகும் கலாட்டாக்காரர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார்கள்.  வேறு வழியின்றி அன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

  ஆவேச வெறி கொண்ட ஆர்பாட்டக்காரர்களைக் கண்டு அஞ்சி ஒளியாமல், கடைசி வரை துணிச்சலோடு ஜெயலலிதா அந்த இடத்திலே இருந்து சமாளித்தது வியப்பாக இருந்தது.

  அடுத்த நாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நேராக காரிலேயே சென்னை திரும்பி விட்டார்.  சென்னை திரும்பியதும் தனக்கு மைசூரில் உதவிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி கூறும் வகையில் சவேரா ஹோட்டலில் ஒரு விருந்து கொடுத்தார்.

  வி.ராமமூர்த்தி

  (சினிமா எக்ஸ்பிரஸ் 15.07.82 இதழ்) 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai