நெல்லை தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புப் பிரார்த்தனை

கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியும், ஆராதனையும் புதன்கிழமை நடைபெற்றன.
நெல்லை தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புப் பிரார்த்தனை


திருநெல்வேலி: கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியும், ஆராதனையும் புதன்கிழமை நடைபெற்றன.

கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 

பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ். அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 

கடந்த ஆண்டு குருத்தோலை தினத்தில் பயன்படுத்தப்பட்ட ஓலைகளை தீயில் எரித்து கிடைத்த சாம்பல் நெற்றியில் பூசி தவக்காலம் தொடங்கப்பட்டது. 

தொடர்ந்து மார்ச் 1, மார்ச் 22 ஆம் தேதிகளில் மாலை 3.30 மணிக்கு சவேரியார் பேராலயத்தில் இருந்து சிலுவைப் பயணமும், ஏப்ரல் 5 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பண்டிகையும், 9 ஆம் தேதி பெரிய வியாழன் சிறப்புப் பிரார்த்தனை நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணி சாமி தலைமையில் நடைபெறும் திருப்பலியில் பாதம் கழுவும் திருச்சடங்குகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 10 ஆம் தேதி புனிதவெள்ளி பிரார்த்தனையும், மாலை 5 மணிக்கு சிறப்பு சிலுவைப் பாதையும் பேராலயத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு 11 மணிக்கு உயிர்ப்புப் பெருவிழா எனப்படும் ஈஸ்டர் பண்டிகை திருப்பலி நடைபெறுகிறது.

இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் தவக்காலத்தையொட்டி புதன்கிழமை காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தவக் காலத்தில் கிறிஸ்துவர்கள் தங்களது சுயவிருப்பங்களை வெறுத்து (பெண்கள் மலர் சூடுதல், அசைவ உணவுகளை உண்ணுதல்) எளிமையான வாழ்வைக் கடைப்பிடிக்கவும், ஆடம்பர செலவுகளாக எண்ணி செலவழிக்கும் தொகையை சேமித்து தேவாலயத்திற்கு படைக்கும் வகையில் உண்டியலில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசுகிறார் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர் எஸ்.அந்தோணிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com