என்ஆர்சி கொண்டு வர மாட்டோம் என உள்துறை அமைச்சகம் சொல்ல மறுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மட்டும் தான் கொண்டு வருவோம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) கொண்டு வர
என்ஆர்சி கொண்டு வர மாட்டோம் என உள்துறை அமைச்சகம் சொல்ல மறுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி


புது தில்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மட்டும் தான் கொண்டு வருவோம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) கொண்டு வர மாட்டோம் என உள்துறை அமைச்சகம் சொல்ல மறுப்பது ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது தேசிய குடிமக்கள் பதிவேடுடன் தெளிவாக தொடர்புடையது. தேசிய மக்கள் தொகை பதிவேடு மட்டும் தான் கொண்டு வருவோம், தேசிய குடிமக்கள் பதிவேடு  கொண்டு வர மாட்டோம் என உள்துறை அமைச்சகம் சொல்ல மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சிதம்பரம்,  நாங்கள் என்பிஆர் மட்டுமே கொண்டு வர முயற்சித்தோம். அது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உதவியது. அதை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கொண்டு வருவதுடன் நிறுத்தினோம். 

2010 ல் நாங்கள் என்பிஆர்  கொண்டு வந்த போது, அசாமில் என்ஆர்சி இல்லை. தற்போது, 19 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மாநிலத்தில் இல்லாதவர்களாக நாங்கள் செய்யவில்லை. அதுபோன்ற கசப்பான அனுபவம் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படவில்லை. 

தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது தனியானது என பாஜக கூறுவது வேடிக்கையானது, தவறானது. தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என பல வார்த்தைகளில் கூறினாலும் இவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. யாரை வெளியேற்ற வேண்டும் என கணடறிவது தான் இவர்களின் நோக்கம் என்றவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் ஏன் 15 வெவ்வேறு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதுவும், குறிப்பாக கடைசியாக வசித்த இடம், பிறந்த இடம், தாய், தந்தையர் வசித்த இடம், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் எண், ஆதார் எண் இவையெல்லாம் எதற்காக என கேள்வி எழுப்பிய சிதம்பரம், திட்டமிட்டு சிலரை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். 

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தை நாங்கள் தூண்டிவிடுவதாக பாஜக கூறிவருவது வேடிக்கையாக உள்ளது.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் முன்னோடுக்கிறது. இதனை திரும்பப் பெற மாட்டோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஏன் எங்களை போராட்டக்காரர்கள் என்கிறார்கள்? நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்துகிறோம். எங்கள் கருத்து சரி என நினைப்பதால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது? இது எப்படி தூண்டிவிடுவதாக கூறமுடியும் என சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் இருக்க வேண்டும்? என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், வெளியாட்களோ அல்லது ஊடகங்களோ முடிவு செய்யக்கூடாது. எங்கள் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காங்கிரஸ் தலைவரை நாங்கள் தேர்வு செய்வோம். இது முற்றிலும் உள்கட்சி விவகாரம் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com