சிகரத்தை வென்று அதன் உச்சியில் இருந்து உலகைப் பார்க்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

சிகரத்தை வெல்ல வேண்டும் தான். சிகரத்தை வெல்வது என்பது எளிமையான காரியமும் கிடையாது...
சிகரத்தை வென்று அதன் உச்சியில் இருந்து உலகைப் பார்க்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்


புதுக்கோட்டை: சிகரத்தை வென்று அதன் உச்சியில் இருந்து உலகைப் பார்க்க வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மாணவிகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பை வெளியிட்டு அவர் பேசியது

சிகரத்தை வெல்ல வேண்டும் தான். சிகரத்தை வெல்வது என்பது எளிமையான காரியமும் கிடையாது. எல்லோரும் சிகரத்தின் உச்சியில் போய் நின்று விட முடியாது. அதற்காக சிகரத்தின் மேல் ஏறாமலும் இருக்க முடியாது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் இமயமலை, ஆல்ப்ஸ் மலைகளில் ஏறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே நமக்கு சிகரத்தை உச்சியில் ஏற வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவரின் வரியைப் போல் நம் எண்ணங்கள் எப்போதும் உயர்வைப் பற்றியே இருக்க வேண்டும். நாம் உயரத்தை எட்டும் பொழுது தான் நம் குடும்பத்தை உயரத்திற்கு இட்டுச் செல்ல முடியும். நாம் உயர்வை எட்டும் போது உறவினர்களை, சமூகத்தை, மண்ணை, மாவட்டத்தை, தேசத்தை, உலகத்தை உயர்வான இடத்திற்கு இட்டுச் செல்ல முடியும். அதற்காக நீங்கள் சிகரத்தை தொட வேண்டும்.

சிகரத்தை வெல்ல வேண்டும் எனில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது போன்ற போட்டிகள் இல்லை. இப்போது அதிக அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று நீங்கள் இங்கு கூடியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைதான், அன்று மொத்த புதுக்கோட்டையிலேயே படித்தவர்களின் எண்ணிக்கையாக இருந்தது. இன்று படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எதற்காகவும் நீங்கள் பயப்படக் கூடாது. எங்களது காலத்தில் உலகம் சுருங்கிக் கிடந்தது. இன்று உலகம் விரிந்துக் கிடக்கிறது. நீங்கள் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம். வானம் விரிந்து கிடக்கிறது உங்களுக்காக. அந்த வானம் வசப்பட நீங்கள் சிகரத்தைத் தொட வேண்டும். சிகரத்தைத் தொட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் புதுக்கோட்டையில் இருந்து வெற்றி பெற முடியுமா என ஐயப்படக் கூடும். அத்தகைய எண்ணம் நம் மனதில் வரக்கூடாது. மிகப்பெரிய சாதனையாளர்கள் எல்லாம் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

புதுக்கோட்டையைவிட சிறிய மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் என்ற சிறிய ஊரில் பிறந்தவர் தான் டாக்டர் அப்துல்கலாம். அவர்தான் நாட்டின் குடியரசுத் தலைவரானார். அதே போல் அண்ணல் மகாத்மா காந்தி மாநிலத் தலைநகரிலோ, மாவட்டத் தலைநகரிலோ பிறக்கவில்லை. போர்ப்பந்தர் மாவட்டம் ராஜ் கோட் என்னும் சிறிய ஊரில் தான் பிறந்தார். அங்கிருந்து வந்து இந்தியாவின் நிலையைப் புரட்டிப் போட  முடிந்தது. அது போல உங்களாலும்  முடியும்.

ஒரு நாளிதழுக்கு, ஒரு எழுத்தாளனுக்கு சமுதாயத்தை எவ்வழியில் கட்டமைக்க வேண்டும், எந்த வழியில் செல்ல வைக்க வேண்டும் என்ற கடமை உள்ளது. சமுதாயத்தைக் கட்டமைப்பது அரசியல் சக்தி அல்ல. நாளைய சமுதாய சிந்தனையை விதைக்கும் திறமை ஓர் எழுத்தாளனிடம் தான் உள்ளது. ஜனநாயகம் என்ற சிந்தனையும் எழுத்தாளனிடம் மட்டுமே உள்ளது. கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனை ஓர் எழுத்தாளனிடம் உள்ளது.

தினமணியின் தராக மந்திரமே நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதி கூற்று தான். இவை அனைத்தும் மகளிர்க்கு தான். எந்த இடத்தில் பெண் இனம் மதிக்கப்படுகிறதோ, எந்த சமுதாயத்தில் பெண் இனம் மதிக்கப்படுகிறதோ, எங்கு பெண்கள் வழி நடத்துகிறார்களோ அந்த சமூகம் மேம்படும்.

தமிழகத்தில் ராணி மங்கம்மாளின் ஆட்சியும், வேலு நாச்சியாரின் வரலாறுகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக் கூடிய செய்திகள். அதே போல் இன்று புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் பயின்று ஒரு மாணவி நாசாவுக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோல நீங்களும் உலகத்தில் உள்ள எந்தவொரு பகுதிக்கும் சென்று சிகரத்தை வெல்ல வேண்டும்.

சிகரத்தை வென்று சிகரத்தின்  உச்சியில் சென்று உலகத்தைப் பார்க்க வேண்டும். தூரத்தில் உள்ள சிகரத்தின் அழகு, பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.அடுத்த அழகு சிகரத்தின் உச்சியில் இருந்து கீழே பார்க்கும் பொழுது அது மிகவும் அழகாக இருக்கும். எனவே சிகரத்தின் உச்சியில் இருந்து அந்த அழகை நீங்கள் ரசிப்பதை நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்றார் வைத்தியநாதன்.

கவிஞர் தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். ஒமேகா பயிற்சி நிறுவனத்தின் நிர்வாகி சந்தரசேகர தவே தலைமையில் பயிற்சியாளர் குழுவினர் பாட வாரியாக பயிற்சிகளை வழங்கினர். சீக்கர்ஸ் ஆர். வெங்கடேஷ் போட்டித் தேர்வுகள் குறித்து விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com