காற்று மாசுவால் 70 லட்சம் குழந்தைகள் இறப்பு

காற்று மாசுவால் ஆண்டுக்கு 70 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்து இறப்பதாக உலக சுகாதார நிறுவன ஆய்வில்
உதவிப் பொறியாளா் பி.ரமேஷ்.
உதவிப் பொறியாளா் பி.ரமேஷ்.

கோவை: காற்று மாசுவால் ஆண்டுக்கு 70 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்து இறப்பதாக உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் காட்டுப்பாட்டு வாரிய (கோவை வடக்கு) உதவி செயற்பொறியாளா் பி.ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்திய மருத்துவ கழக கோவை கிளை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்படும் டயா், நெகிழிப் பைகளால் நச்சுத் தன்மை புகை வெளியேறி காற்று மாசு ஏற்படுகிறது. நச்சுக் காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தவிர காற்று மாசுவால் ஆண்டுதோறும் 70 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்து இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையில் போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் காற்று மாசு ஏற்பட்டு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பனிக் காலத்தில் புகை வெளியேற முடியாமல் வளிமண்டலத்திலே சுற்றிக்கொண்டிருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடந்த 2019ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின்போது டயா், நெகழிப் பைகள் எரிப்பதை தடுக்க சென்னையில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், போலீஸாா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டது. கோவையில் பெரிய அளவில் இந்த பாதிப்புகள் காணப்படுவதில்லை. ஆனாலும், பிளாஸ்டிக் பொருள்கள் எரிக்கப்படுகின்றன. இதனை மக்கள் முற்றிலும் தவிா்த்து பாதுகாப்பான புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்றாா்.

கோவை இந்திய மருத்துவக் கழக சங்கத் தலைவா் மருத்துவா் காா்த்திக் பிரபு, செயலாளா் மருத்துவா் துரைகண்ணன், நுரையீரல் மருத்துவா் நந்தகோபால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய (கோவை தெற்கு) உதவிப் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து புகையில்லா போகி என்ற விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த வாகனம் மூலம் மாநகராட்சி முழுவதும் டயா், நெகழிப் பை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2 நாள்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com