குரூப் 4 முறைகேடு புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 
குரூப் 4 முறைகேடு புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை தொடங்கியது


சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார்  விசாரணையை தொடங்கியுள்ளனர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவா்களில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பிடித்தனர். சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர். ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும், 15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் முதல் 40 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தோ்வாணையம், சம்பந்தப்பட்ட தோ்ச்சி பெற்ற நபா்களுக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி, தரவரிசையில் மாநில அளவில் முதல்  சுமாா் 40 பேரிடம், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். 

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள்,   ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.

மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.24) விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக, ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவர்களிடம் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதன்மை பெற்றது எப்படி என இருவரிடம் விசாரணை தொடங்கிய சிபிசிடி போலீஸார், அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com