திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

திருவொற்றியூரில் கரோனா தொற்று நோயாளி ஒருவர் இறந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.
திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனைக்கு சீல்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கரோனா தொற்று நோயாளி ஒருவர் இறந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.
     
திருவொற்றியூர் மேற்கு பகுதி கார்கில் நகரைச் சேர்ந்தவர் பிலிப்ஸ் (55). இரும்பு வியாபாரியான இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெரியார் நகர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்ஸுக்கு சளி பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பிலிப்ஸ் உயிரிழந்தார்.  ஆனால் அவரின் சடலத்தை பெற்று உறவினர்கள் மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பிலிப்ஸூக்கு கரோனா தொற்றுக்கான வழிமுறைகளின்படி முறையான சிகிச்சை அளிக்கவில்லை. தொடக்கத்தில் அவருக்கு கரோனா தொற்று இல்லாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகுதான் தொற்று ஏற்பட்டுள்ளது. 

எனவே பிலிப்ஸூக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவுதான் எனவும், உரிய இழப்பீடு தந்தால் மட்டுமே சடலத்தை எடுத்துச் செல்ல முடியும் என பிலிப்ஸின் உறவினர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் மருத்துமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் சமாதானம் ஏற்பட்டதையடுத்து பிலிப்ஸின் சடலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு திருவொற்றியூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

மருத்துவமனைக்கு சீல்: இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் மருத்துவமனையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மேலும் மருத்துவமனையில் நடைபெற்று வரும் சிகிச்சை முறைகள் குறித்து மூன்று நாள்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவமனையை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரி பால்தங்கதுரை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com