எட்டயபுரத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
By DIN | Published On : 27th June 2020 12:02 PM | Last Updated : 27th June 2020 12:02 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள், அதே மாவட்டம் எட்டயபுரத்தில் மீண்டும் ஒரு சம்பவம் காவலர்களை நோக்கி மையம் கொண்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்டயபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29) கட்டித்தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை 20 ஆம் தேதி மாலை மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். இதில் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் அந்த வாலிபர் மதுபான கடைக்கு மீண்டும் சென்று மது அருந்தியுள்ளார். ரத்தக் காயங்களுடன் வாலிபர் ஒருவர் மது அருந்துவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்பிரிவு காவலர் கார்த்திக் உள்ளிட்ட காவலர்கள் மதுபான கடைக்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பைக் விபத்து என தெரிய வந்ததால் பின்னர் அவரை எச்சரித்து எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அவரிடம் இருந்த பைக்கை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக பைக்கை மீட்டுச் செல்ல அந்த வாலிபர் காவல் நிலையத்திற்கு வரவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கணேசமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. காவலர்கள் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கடந்த 20 ஆம் தேதி காவலர்கள் தன்னை தாக்கி தனது பைக்கை பறிமுதல் செய்து கொண்டதாலும் குடும்பத்திற்குள் பிரச்னை தொடர்ந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருந்த கணேசமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் காவலர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கணேசமூர்த்தி எழுதியதாக ஒரு கடிதத்தையும் புகார் மனுவில் இணைத்துள்ளனர். இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டையபுரம் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.