தென்மேற்குப் பருவமழை தாமதம்: நெல்லை மாவட்ட குளங்கள் வறண்டதால் கால்நடைகள் தவிப்பு

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்காமல் தாமதமாகி வருவதால் குளங்கள் அனைத்தும் வறட்சியின் பிடிக்கு சென்று கொண்டிருக்கின்றன. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகள் தவித்துவருகின்றன.
திருநெல்வேலி அருகே வறண்ட அருகன்குளத்தில் நீரைத் தேடியலைந்த ஆடுகள்
திருநெல்வேலி அருகே வறண்ட அருகன்குளத்தில் நீரைத் தேடியலைந்த ஆடுகள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்காமல் தாமதமாகி வருவதால் குளங்கள் அனைத்தும் வறட்சியின் பிடிக்கு சென்று கொண்டிருக்கின்றன. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகள் தவித்துவருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் இறுதியில் தொடங்கும் கோடைக்காலம் மே இறுதி வரை நீடிக்கும். ஜூன் முதல் வாரத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தொடங்கிவிடும். கேரளத்தில் ஜூன் மாதத்தில் பெய்யும் பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்யும். ஜூன் இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயரும்.

ஆனால், நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை. கோடை மழைப்போல் சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. கடந்த இரு நாள்களாக வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.

மழையின் தாமதம் காரணமாக குளங்களின் நீர்இருப்பு மிகவும் வேகமாக சரிந்து பல குளங்கள் வறட்சியின் பிடிக்கு சென்றுவிட்டன.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 1221 கால்வரத்து குளங்களும், 1297 மானாவாரி குளங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளன. வேளாண் துறையினரின் கணக்கெடுப்பின்படி 2400-க்கும் மேற்பட்ட குளங்கள் வறட்சியின் பிடிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் போது உயர்ந்த பிரதான அணைகளின் நீர்மட்டம் மிகவும் வேகமாக சரிந்து வருகின்றன. ஏற்கெனவே வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டுவிட்டன.

தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளதால் கடனா, ராமநதி அணைகளில் ஓரளவு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே கார் சாகுபடியைத் தொடங்க முடியும்.

திங்கள்கிழமை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 49.45 அடியாக இருந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.30 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67 அடியாகவும் இருந்தது. கடனாநதி- 36.20 அடி,  ராமநதி-40.75, கருப்பாநதி- 24.94, குண்டாறு-27.75, வடக்கு பச்சையாறு-10.25, நம்பியாறு-10.82, கொடுமுடியாறு-14.25, அடவிநயினார்-67.25 அடி நீர்மட்டம் உள்ளது.

கால்நடைகள் பாதிப்பு

தாமிரவருணி வடிநிலக்கோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு, தெற்கு கோடைமேழலகியான் கால்வாய், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய் உள்ளிட்டவை ஜூன் இரண்டாம் வாரத்தில் கார் சாகுபடிக்காக திறக்கப்படும்.

நிகழாண்டில் மழையின் தாமதம் காரணமாக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுதவிர திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போருக்கு குளங்களே பேருதவியாக உள்ளன. செம்மறியாடுகள், வெள்ளாடுகள், எருமைமாடுகள், பசுமாடுகள் ஆகியவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது குளங்களிலேயே தண்ணீர் குடிக்க வைக்கப்படும். வழக்கமாக மே மாதம் வரை குளங்களில் சிறுகுட்டை தண்ணீரை பயன்படுத்திக்கொள்வோம். அதற்குள் சாரல் மழை வந்துவிடும்.

இப்போது மழையில்லாததால் ஆடுகளை நீண்ட தொலைவுக்கு தண்ணீருக்காக அழைத்துச்செல்லும் நிலை உள்ளது. மேலும், தாமிரவருணி கரையோர பகுதியிலேயே மேய்ச்சலுக்கு விடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஒரு சில கால்வாய்களிலாவது அணைநீரைத் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர்த் தேவைக்கு முன்னுரிமை

தாமிரவருணி நீரை நம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால் கடந்த பத்தாண்டுகளில் தண்ணீரின் தேவையும் மிகவும் அதிகரித்துள்ளது.

நிகழாண்டில் சாரல் மழையே இன்னும் தொடங்காததால் அணைகளுக்கு நீர்வரத்து உயராமல் உள்ளது. பாபநாசம் அணை 60 அடிக்கு மேல் சென்றால் மட்டுமே கார் சாகுபடிக்காக அணையில் இருந்து நீர் திறக்க முடியும். குடிநீர்த் தேவைக்கு முன்னுரிமை கொடுத்தே நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com