வேலூரில் மொத்த காய்கறி மார்க்கெட் மூடல்: மறுத்த வியாபாரிகள் மீது தடியடி

பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக வேலூரில் உள்ள மொத்த காய்கறிச் சந்தையான நேதாஜி மார்க்கெட் வியாழக்கிழமை

வேலூர்: பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக வேலூரில் உள்ள மொத்த காய்கறிச் சந்தையான நேதாஜி மார்க்கெட் வியாழக்கிழமை மூடப்பட்டது. அப்போது எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள மொத்த காய்கறிச் சந்தையான நேதாஜி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காய்கறிகள் வாங்க வந்துசெல்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் வேலூர் மாநகரில் பெரும் பாலான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியில் நடமாடுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வதும் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு பொதுவெளிக்கு வரும் நபர்கள் அதிகளவில் நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று வருவது தெரியவந்தது. மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு அதிகளவில் மக்கள் வந்து சென்றலால் அங்கு எப்போதும் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் இருந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து, மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக நேதாஜி மார்க்கெட்டை மூட மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை காலை நேதாஜி மார்க்கெட்டை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது, நேதாஜி மார்க்கெட்டை மூடுவதற்கு காய்கறி வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களிடம் ஒரே இடத்தில் குவிந்த வியாபாரம் செய்யாமல் வியாபாரிகள் அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அருகே காய்கறிகளை வியாபாரம் செய்து கொள்ளவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருப்பதையும் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

ஆனால், அதற்கு வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் நேதாஜி மார்க்கெட்டை மூடி சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com