ஊரடங்கு உத்தரவுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: பிரதமர் மோடி

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதற்காக, நான் எடுத்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். 
ஊரடங்கு உத்தரவுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: பிரதமர் மோடி


புதுதில்லி: கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதற்காக, நான் எடுத்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று மனதின் குரல் என்ற வானொலி உரையின் போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: கரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. 

மக்கள் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். நான் எடுத்த இந்த கடினமான ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வீட்டில் முடங்கி இருப்பதின் சிரமம் புரிகிறது. நீங்கள் என் மீது கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த சூழலில் கரோனா நோய்த்தொற்று பரலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை. கரோனா குறித்த வதந்தியை நம்ப வேண்டாம். விதிகளை மீறி வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம். சட்டத்தை, உத்தரவுகளை மீறி வெளியே வரும் சிலரால் நாம் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர். 

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். 2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, உங்களுடைய சேவைக்கு ஈடு இணையே இல்லை. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகள், வீர வணக்கங்கள். நீங்களும் கவனமாக இருங்கள். கரோனா பாதித்த நபர்கள் மற்றும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தனித்தனியே பிரதமர் உரையாடியது குறிப்பிடத்தக்கது. 

கரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம்.

பாராட்டு: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஊழியர்கள், ஓட்டுநர்கள், வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 

உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம்.  தேசநலனை கருதி வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கான அடிப்படை தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்வோம். கரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது என்று பிரதமர் மோடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com