கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி தொடர்ந்து சிவப்பு மண்டலமாக இருக்கும்: தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

தேசிய ஊரடங்கு முடியும் வரை ஒட்டுமொத்த தில்லியும் சிவப்பு மண்டலத்தின் கீழ் செயல்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 


புதுதில்லி: தேசிய ஊரடங்கு முடியும் வரை ஒட்டுமொத்த தில்லியும் சிவப்பு மண்டலத்தின் கீழ் செயல்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு (மே. 17) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. தொற்றின் பாதிப்பை பொறுத்து நாட்டில் உள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேசிய ஊரடங்கு முடியும் வரை நாட்டின் தலைநகர் தில்லியின் அனைத்து மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தின் கீழ் செயல்படும் என்று சனிக்கிழமை தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தில்லியின் உள்ள 11 மாவட்டங்களிலும் 10-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே அவை அனைத்தும் சிவப்பு மண்டலத்தின் கீழ் செயல்படும்" என்றார்.

மேலும் "சிவப்பு மண்டலத்திற்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்," என்று அவர் கூறினார்.

தென்கிழக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,571 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அதிகமாக 20 கட்டுப்பாட்டு மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.  

வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டத்தில் தலா 66 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளதால் மூன்று கட்டுப்பாட்டு மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின்படி, தில்லியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,738 -ஆக உயர்ந்துள்ளது, 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com