குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சரிவிலிருந்து மீள வட்டி தள்ளுபடி அவசியம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சரிவிலிருந்து மீள வட்டி தள்ளுபடி அவசியம்

கரோனா காரணமாக வீழ்ச்சியை சந்தித்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர பொது முடக்கக் காலத்திற்கான

கரோனா காரணமாக வீழ்ச்சியை சந்தித்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர பொது முடக்கக் காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

கரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் இயங்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மீண்டும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு உற்பத்திப் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. 

பொது முடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தச்  சூழ்நிலையில் தொழில் துறையில் அதிலும் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்படைந்து தாங்கமுடியாத நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளன. இதனால், அவை செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற கேள்வி  எழுந்துள்ளது. 

தொழில் நடைபெறவில்லை.  வருவாயும் ஈட்டவில்லை.  அதனால் அந்த  நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை கூட செலுத்த முடியாத நிலை உள்ளது. தொழிற்சாலை இயங்காத காலத்துக்கு குறைந்தபட்ச மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. 

உற்பத்திக்கு செய்வதற்கு மூலப்பொருட்கள், நடைமுறை செலவுகள், தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றுக்கு தற்போது முதலீடு தேவைப்படுகிறது.  ஆனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொழிலே நடைபெறாமல் வருவாய் இல்லாத சூழ்நிலையில் நடைமுறை செலவினங்களுக்கு பணம் இல்லாமல் கடுமையான நிதி நெருக்கடியை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. 

கடனுக்கான தவணை செலுத்துவது, வட்டி செலுத்துவது, சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவது ஆகியவற்றுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தவணை, வட்டி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும் வருவாய் ஈட்டாத காலத்திற்கான வட்டியை அந்த தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.  ஆனால் உற்பத்தி, விற்பனை நடைபெறாத போது வருமானம் ஈட்டாத அந்த காலத்திற்கு அவர்கள் வட்டியை செலுத்துவது என்பது மிகவும் பரிதாபகரமானதாகும். 

இதுகுறித்து இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார செயலாளர் மற்றும் வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க தலைவருமான எம்.வி. சுவாமிநாதன் கூறியது:  இந்தியாவிலேயே அதிக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாகும்.  நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் இந்த துறையின் பங்களிப்பாகவே உள்ளது. மேலும்,  நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீதம் இத்துறை மூலமே நடைபெறுகிறது. 

இந்தியாவில் 6.33 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், 8 ஆயிரம் வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க தொழில் நிறுவனங்கள்   பொது முடக்கம் காரணமாக இயங்க முடியாமல் போனது. இதனால், அவை  கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.  தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நடைமுறை மூலதனம் இல்லாததால் அவை பெரும்  அவதிக்குள்ளாகியுள்ளன. இதனால், சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி, சொத்து வரி, தொழில் வரி, தொழிலாளர்களுக்கும் சம்பளம், ஏற்கெனவே வாங்கப்பட்ட கடனுக்கான தவணை, வட்டி உள்ளிட்டவை செலுத்த முடியாத நிலையில் அவை உள்ளன.

மத்திய அரசு அறிவித்துள்ள கடனுதவிகளை வங்கிகள் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோருக்கு விரைந்து வழங்க வேண்டும்.   கடனுதவிகள் விரைந்து வழங்கினால் மட்டுமே தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கான நிதி கிடைக்கும். குறைந்தபட்ச ஆவணங்களைப் பெற்று குறுகிய கால அவகாசத்தில், குறைந்த வட்டியில் அதாவது 7 சதவீத வட்டியில் வங்கிகள் கடனுதவிகளை அளிக்க வேண்டும். இதுகுறித்த கோரிக்கைகள் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுவரை பொது முடக்க காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.

தொழில்துறையினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றினால் மட்டுமே   பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய வீழ்ச்சியிலிருந்து விரைவில் மீண்டெழும்...!

முக்கிய கோரிக்கைகள்
பொது முடக்கக் காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  மின்சார கட்டணம்  செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  சரக்கு மற்றும் சேவை வரி சதவீதத்தை குறைக்க வேண்டும்.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும்.  பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் வங்கிகளில் வழங்கப்படும் கடனை பயனாளிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வருமான வரி சதவீதத்தையும் குறைக்க வேண்டும்.  வருமான வரிக்கான உச்ச வரம்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com