நாமக்கல் அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த
நாமக்கல் அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்.

நாமக்கல்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணியாற்றும் செவிலியர்கள். தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் கடந்த 25 ஆம் தேதி முதல் தங்கள் பணியிடத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து வருகின்றனர். 

நாமக்கல் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் போட்டி தேர்வு மூலமாக சுமார் 11,500 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் ரூபாய் 14,000 ஊதியத்தில் பணி செய்து வருகின்றனர். 

தமிழக அரசு படி ஆணை வழங்கியபோது இரண்டு வருடம் பணி நிறைவுற்றதும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் செவிலியர்களை ஐந்து வருடம் பணி நிறைவு பெற்ற நிலையிலும் வெறும் 1,800 பேரை மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு  மாற்றியுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களை பணியமர்த்தும்போது நேரடியாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்துவதில்லை. மாறாக ஒப்பந்த முறையில் பல வருடங்களாக குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தி பின்பு காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கிறது.

மருத்துவத்துறையில் ஒரே பணிக்கு 2 ஒப்பந்த செவிலியர்களையும் ஒரு நிரந்தர செவிலியரையும் 2:1 என்ற விகிதாச்சாரத்தில் பணியமர்த்துவதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே பணியை செய்யும் செவிலியர்களில் இரண்டு செவிலியர்களுக்கு ஒப்பந்த ஊதியமும், ஒரு செவிலியர் காலமுறை ஊதியம் இந்த அரசு வழங்குகிறது.

 பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் தமிழக எங்கள் செவிலியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. 

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஒரே வேலையைச் செய்யும் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படி பாரபட்சமில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்று வரை இந்த அரசு ஒப்பந்த செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவில்லை. கரோனா பணியில் நிரந்தர செவிலியருக்கு இணையான வேலையை 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஒரே பணியை செய்து கொண்டிருக்கும் எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதில் அலட்சியம் காட்டப்படுகிறது.

குறைவான ஊதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பொருளாதார பின்னடைவில் உள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு  எங்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com