சேலம் அருகே கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்

சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகள்,  காளைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு, பெரியம்மை வைரஸ் நோய் பரவி வருகிறது.
பெரியம்மை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட கறவைமாடு.
பெரியம்மை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட கறவைமாடு.

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகள்,  காளைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு, பெரியம்மை வைரஸ் நோய் பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இந்நோயால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என்பதால், விவசாயிகள் கவலையடத் தேவையில்லையென கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தம்மம்பட்டி,  தலைவாசல், ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான பகுதி கிராமங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வரும் கிராமப்புற மக்கள், கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பை முக்கிய உப தொழிலாக கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக கரோனா நோய்தொற்று பாதிப்பால், போதிய வருவாயின்றி தவித்து வரும் விவசாயிகளும், விவசாயக் கூலி தொழிலாளர்களும், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தியில் கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் கரவை மாடுகள், காளைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு, 'லம்ப் ஸ்கின் டிசீஸ்' என குறிப்பிடப்படும் பெரியம்மை வைரஸ் நோய் பரவி வருகிறது.

கால்நடைகளின் மேற்தோல் பகுதி முழுவதும், மனிதர்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் காணப்படுவதைப் போல, தடித்த கொப்புளங்கள் காணப்படுகிறது. காய்ச்சலும் ஏற்படுகிறது. இதனால், கால்நடைகள் தீவனம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து, சோர்வடைந்து காணப்படுகின்றன. கறவை மாடுகள் பால் சுரப்பு குறைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து, வாழப்பாடி அடுத்த மாரியம்மன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் விவசாயி செல்வக்குமார் (45)  மற்றும் சிலர் கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கால்நடைகளை பெரியம்மை நோய் வைரஸ் தாக்கி வருகிறது. இதனால் கால்நடைகள் உடலின் மேற்பகுதியில் கொப்புளங்கள் ஏற்படுகிறது. கால்நடைகள் தீவனம் எடுத்துக் கொள்ளாமல் சோர்ந்து காணப்படுவதால், பால் சுரப்பு குறைகிறது. இந்த நோய் பரவாமல் கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து கால்நடை மருத்துவர்கள் சிலரிடம் கேட்டதற்கு,  'லம்ப் ஸ்கின் டிசீஸ்' என குறிப்பிடப்படும்,  இந்த பெரியம்மை வைரஸ் நோய் கால்நடைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தோலில் ஏற்படும் தடிப்புகள் ஓரிரு நாட்களுக்குப் பிறகு, தானாக மறைந்துவிடும். வழக்கம்போல கால்நடைகள்தீவனம் உட்கொள்ளும். எப்போதும் போலவே பால் சுரக்கும். பெரியம்மை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் கல்உப்பு, 100 கிராம் வெல்லம் ஆகியவற்றை அரைத்து  இயற்கை உணவையை மருந்தாகக் கொடுக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

தோலிலுள்ள தடிப்புகளுக்கு, குப்பைமேனி, துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து, வேப்பெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து பூசினால், ஓரிரு நாட்களில் மறைந்துவிடும். 

அனைத்து கால்நடை மருத்துவ மனைகள், கிளை நிலையங்களிலும், கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று, , பெரியம்மை பாதித்த கால்நடைகளை பராமரிப்பு குறித்து  விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தப் பெரியம்மை வைரஸ் நோயினால், கால்நடைகளுக்கும்,  கால்நடை பராமரிப்பபோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே விவசாயிகள் கவலையடையத் தேவையில்லையென தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com