தமிழகத்தில் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை நாள்தோறும் வேகமாக பரவி வருவதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு குறித்து தமிழக அரசு தெரிவித்தது,

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். 

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். 

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com