பஞ்சாப் தேர்தல்: அகாலி தளத்துடன் பகுஜன் சமாஜ் கூட்டணி

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் தேர்தல்: அகாலி தளத்துடன் பகுஜன் சமாஜ் கூட்டணி

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அடுத்தாண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அகாலி தளமும், பகுஜன் சமாஜ் கட்சியினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இவ்விரண்டு கட்சிகளின் கூட்டணியும் இன்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பேசியதாவது,

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் வருங்காலங்களில் வரவுள்ள தேர்தல்களில் பகுஜன் சமாஜுடன் இணைந்து அகாலி தளம் போட்டியிடவுள்ளது. பஞ்சாப் பேரவையில் உள்ள 117 இடங்களில் பகுஜன் 20 இடங்களிலும், அகாலி தளம் 97 இடங்களிலும் போட்டியிட உள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும், பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதீஸ் மிஸ்ரா பேசியதாவது,

பஞ்சாபின் மிகப்பெரிய கட்சியான சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால் இது ஒரு வரலாற்று நாள். 1986 ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகாலி தளம் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டோம். அதில் 13 இடங்களில் 11 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த முறை எங்கள் கூட்டணியை உடைக்க முடியாது.

காங்கிரஸின் தலைமையிலான ஊழல் மற்றும் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவோம். தற்போதைய அரசாங்கம் தலித் மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது. நாங்கள் அனைவரின் நலனுக்கும், மேம்பாட்டிற்கும் பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com