ஈரோடு மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் ரூ.2000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி.
ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் ரூ.2000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி.


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தனர். இத்திட்டம் ஜூன், 3 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தொகையாக ரூ.2,000 வழங்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில் கடந்த 10 -ஆம் தேதி முதல் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் உதவிடும் வகையில், உடனடியாக, கரோனா முதற்கட்ட நிவாரணத் தொகை ரூ. 2,000 ரூபாய் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து, 13,910 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ. 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊரடங்கு காலத்திலும் ரேஷன் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

தற்போது தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் நிவாரண தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு. அதன்படி கடந்த சில நாள்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகித்து வந்தனர். அதில் தொகை பெறுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு 200 பேர் வந்து நிவாரண தொகை வழங்கும் படி டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.  அந்த நாள்களில் அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் வந்து நிவாரண தொகையை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டோக்கன் வினியோகம் செய்யும் பணியும் முடிவடைந்தையொட்டி சனிக்கிழமை முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கரோனா முதற்கட்ட நிவாரணத் தொகையான ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. 

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் ரூ.2000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து ஈபிபி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், சித்தோடு, நசியனூர், சாணார்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் அமைச்சர் முத்துசாமி நிவாரண தொகை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.

கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் தடுப்புகள் அமைத்து  சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போட்டு இருந்தது. அந்த வட்டங்களில் பொதுமக்கள் நின்று நிவாரண தொகையை வாங்கி சென்றனர். 

இதற்காக சனிக்கிழமை காலை 6 மணி முதலே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவியத் தொடங்கினர். முகக் கவசம் அணிந்தால் மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள்  நிவாரண தொகையை வாங்க முக கவசம் அணிந்து வந்திருந்தனர். இன்னும் ஒரு வாரம் முழுவதும் இந்தப் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு தனிமை காலம் முடிந்தவுடன் அவர்கள் பகுதிக்குள்பட்ட நியாய விலைக் கடைகளில் வந்து நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் சனிக்கிழமை நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com