சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் பெரும் சிக்கலில் இருக்கிறது... மெட்ரோ வாட்டர் நீர் அட்டவணை அச்சுறுத்தல்!

சென்னையின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவானது எச்சரிக்கப்பட்ட எல்லையைக் கடந்து அதல பாதளத்தைத் தொட முயன்று கொண்டிருக்கிறதாம். இந்நிலை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கவே செய்யுமே
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் பெரும் சிக்கலில் இருக்கிறது... மெட்ரோ வாட்டர் நீர் அட்டவணை அச்சுறுத்தல்!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை  நிலவி வரும் நிலையில் தலைநகர் சென்னையில் வருடம் முழுதுமே குடிநீர் பற்றாக்குறை தான் நீடித்து வருகிறது. ஆனாலும் மக்கள் நீர் மேலாண்மை பற்றிய தங்களது புரிதலை இப்போதும் கண்மூடித் தனமாகப் புறக்கணித்தால் இந்தக் கோடையை சமாளிக்க போதுமான நீராதாரங்கள் இங்கு இல்லை என்பது நிதர்சனம்.

சென்னையின் பல பகுதிகளில் இப்போதே மக்கள் காலிக் குடங்களுடன் தர்ணாவில் இறங்கி விட்டனர். குடிநீருக்காக அவர்களது போராட்டம் துவங்கி விட்டது. இந்நிலையில் மெட்ரோ வாட்டர் வெளியிட்டுள்ள நகரின் நீர் அட்டவணை மேலும் அச்சுறுத்துவதாக உள்ளது. சென்னையின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவானது எச்சரிக்கப்பட்ட எல்லையைக் கடந்து அதல பாதளத்தைத் தொட முயன்று கொண்டிருக்கிறதாம். இந்நிலை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கவே செய்யுமே தவிர குறைய வாய்ப்பில்லை என்பதாகவே இருக்கிறது கடந்தகால அனுபவங்கள்.

 உதாரணத்திற்கு; சென்னை பெரம்பூரில் இருக்கும் திரு.வி.க நகர் பகுதியில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் 2.88 மீட்டர் குறைந்துள்ளதாக மெட்ரோ வாட்டர் செய்தி அட்டவணை சொல்கிறது. 2016 ஆம் ஆண்டில் இதே பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டர் குறைந்திருந்ததாம். ஆக மொத்தம் இந்த ஆண்டின் 2.88 மீட்டரும் சேர்ந்து அந்தப் பகுதிகளில் இப்போதைய நிலத்தடி நீர் மட்டம் ஒட்டுமொத்தமாக அபாயகரமான அளவில் 4.88 மீட்டர் குறைந்து விட்டது. இதற்கு பருவ மழை பொய்த்தது, மழை நீரைத் தேக்கி வைக்க போதிய நீராதாரங்கள் இல்லை எனும் குற்றச்சாட்டுகளைத் தாண்டி தங்களுக்கு கிடைத்த குடிநீர் வசதிகளை கண்மூடித்தனமாகக் கையாண்டு வீணடித்த பெருமை மக்களையும் சேரும் என்கின்றன நீர் மேலாண்மை பற்றிப் பேசும் கட்டுரைகள்.

மெட்ரோ வாட்டர் வெளியிட்டுள்ள நீர் அட்டவணை செய்திக் குறிப்பில் இடம் பெற்றுள்ள மேலும் சில பகுதிகள்;

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமாக குறைந்துள்ள இடங்கள்:

திரு.வி.க நகர்: 2.88 மீட்டர்
அம்பத்தூர்       : 2.35 மீட்டர்
ராயபுரம்           : 2.19 மீட்டர்

நிலத்தடி நீர்மட்டம் குறைவால் குறைவான பாதிப்புள்ள இடங்கள்:

சோழிங்க நல்லூர்: 0.70 மீட்டர்
திருவொட்டியூர்    : 0.86 மீட்டர்
பெருங்குடி               : 0.96 மீட்டர் 

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு... தண்ணீர் சிக்கனம் மட்டுமே!

மெட்ரோ வாட்டரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துவது;

  • வீட்டிலிருக்கும் தண்ணீர் குழாய்கள் லீக் ஆகாமல் சரியாக இயங்குகின்றனவா எனத் தொடர்ந்து சோதிப்பது. குழாய்களில் ரிப்பேர் இருந்தால் உடனடியாகச் சரி செய்து தண்ணீர வீணாகாமல் காப்பது;
  • பல் துலக்கும் போதும், சவரம் செய்து கொள்ளும் போதும் தேவையற்று திறந்திருக்கும் குழாய்களின் மூலம் நீர் வீணாவதைத் தடுப்பது;
  • பயன்படுத்தாத போது குழாய்களை சரி வர மூடிப் பராமரிப்பது;

இவற்றை ஒவ்வொரு சென்னை வாசியும் சரியாகப் பின்பற்றினால் ஓரளவுக்காவது இந்த ஆண்டு நிலவப்போகும் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com