ஜோசப் வெறும் டிரைவர் மட்டுமல்ல, ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தை மரணங்களைத் தடுக்க உபாயம் கண்டு பிடித்த சூழல் போராளி!

பொதுவாக ஆழ்துளைக் கிணறுகள் விசயத்தில் தோண்டப்பட்டு எதிர்பார்த்த ஆழங்களில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகளினால் தான் இப்படியான மோசமான விபத்துகள் பெரும்பாலும் நேர்ந்து விடுகி
ஜோசப் வெறும் டிரைவர் மட்டுமல்ல, ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தை மரணங்களைத் தடுக்க உபாயம் கண்டு பிடித்த சூழல் போராளி!

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் சடலமாக மீள்வது என்பது அடிக்கொரு தரம் இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் நம்மைக் கடந்து போகும் துக்க கரமான ஒரு செய்தி. எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் ஆழ்துளைக் கிணறுகளில் தவறுதலாக விழுந்த பெரும்பாலான குழந்தைகள் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன தான் தீர்வு. ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்களுக்கு இவ்விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்து விட முடியும்?

பொதுவாக ஆழ்துளைக் கிணறுகள் விசயத்தில் தோண்டப்பட்டு எதிர்பார்த்த ஆழங்களில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகளினால் தான் இப்படியான மோசமான விபத்துகள் பெரும்பாலும் நேர்ந்து விடுகின்றன என்பது மிக மிக வருத்தத்திற்குரிய செய்தி. பூமிக்குள் பல நூறு அடிகளுக்கு நீளக் கூடிய இம்மாதிரியான ஆழ்துளைக் கிணறுகளுக்கு தோண்டப்பட்ட இடத்தில் அடையாளங்கள் எதுவும் இல்லையெனில் பூமியின் மேற்பரப்பில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படியொரு பள்ளம் இருக்கும் சுவடே தெரிய வாய்ப்பில்லை. குறிப்பாக விளையாட்டுப் பருவத்திலிருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. இதனால் தான் ஆழ்துளைக் கிணறுகளில் பலியானோர் எண்ணிக்கையில் எப்போதும் குழந்தைகளே பெரும்பான்மையினர் ஆகி விடுகிறார்கள். இந்த சோகத்திலிருந்து குழந்தைகளையும், பெற்றோர்களையும் மீட்பதற்கான வழி ஏதாவது உண்டா எனில்;  நாம் ஏன் இவரது ஆலோசனையைப் பின்பற்றக் கூடாது என தோன்றுகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த டிரைவரும், சூழல் போராளியுமான ஜோசப் அதற்கொரு நல்ல வழி சொல்கிறார். எதிர்பார்த்த ஆழங்களில் நீரின்றி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை சுற்றி அப்படியே பத்தடி நீளம், பத்தடி அகலத்தில் ஒரு குழியை வெட்டி, ஆழ்துளைக் கிணற்றின் வாய்ப்பகுதியை வடிகட்டியாகச் செயல்படுத்தத் தக்க மூடி போன்ற அமைப்பால் மூடி அதன் திறப்பு வெறும் 5 மி.மீட்டர் அளவுக்கு மட்டுமே இருக்குமாறு திறந்து வைத்துப் அதைப் பொருத்த வேண்டும். இப்போது மழைக்காலங்களில் இந்த கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மிகச்சிறந்த மழைநீர் சேகரிப்பு மையங்களாக செயல்படக்கூடிய அளவிலான திட்டம் தயார். மேற்புறத்தில் கிணறு போன்ற அமைப்பாலும், உள்ளே மூடப்பட்ட வாய்ப்பகுதி இருப்பதாலும் விவரமறியாமல் குழந்தைகள் விளையாட்டுத் தனமாக அதனுள் விழ நேராது. இப்போது ஆழ்துளைக் கிணற்றுக்கும் ஒரு முறையான பயன் கிட்டியது. அதனுள் தவறி விழக்கூடிய மனித மற்றும் விலங்கு உயிர்களுக்கும் ஒரு பாதுகாப்பு கிடைத்தது என்றாகி விடும்.

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மறு நிர்மாணம் செய்வதால் ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் கதையாக இரண்டு விதமான பயன்களை ஈட்டலாம்.

ஒன்று பூமியின் நீராதாரங்களைக் காக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பல்லாயிரம் அடிகளுக்குத் தோண்டப்பட்டு நீர் உறிஞ்சுவதற்காக அமைக்கப் படும் இந்தக் குழாய்கள் மூலம் மீண்டும் நாம் நீர் சேகரிப்பும் செய்ய முடியும் என நிரூபித்த வகையில் இது மிகச் சிறந்த மழைநீர் சேகரிப்புத் திட்டங்களில் ஒன்றாகி விடுகிறது. அது மட்டுமல்ல;

இப்படி ஒரு உத்தியைப் பின்பற்றுவதின் மூலம் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் அகஸ்மாத்தாக அடிக்கொரு தரம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் ஒரு முடிவு கட்டலாம். என்பது இதன் இரண்டாவது பயன்.

திட்டம் எல்லாம் அற்புதமான திட்டம் தான்; ஆனால் இதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது யார்?

அந்த அரும்பணியைத் தான் உடுப்பியைச் சேர்ந்த டிரைவர் ஜோசப் செய்கிறார். வாழ்வின் மிக மோசமான விபத்து ஒன்றிலிருந்து மீண்டு வந்த ஜோசப்புக்கு சுற்றுப் புறச் சூழல் மீது அக்கறை வந்து இப்படி ஒரு விசயத்தை சாதித்து வருவது அவரது மனிதத் தன்மைக்கு ஒரு உதாரணம் எனலாம். ஜோசப் இப்போது டிரைவர் மட்டுமல்ல, அவர் ஒரு சூழல் போராளி. தனது வேலையோடு வேலையாக கிராமங்கள் தோறும் பயணம் செய்து கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை எவ்விதம் இப்படி புணரமைப்பது என்பது குறித்து அவர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்தச் செய்தியின் வழியாக இப்போது நாமும் அறிந்து கொண்டோம். எனவே ஆழ்துளைக் கிணறுகளை இப்படியும் பயன்படுத்தலாம் நாமும் நாலு பேருக்குச் சொல்லி இந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டு நம்மால் ஆன சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com