சமூக பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

இந்த வழக்கு எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆசிரியர், தனது வகுப்பில் படித்த 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சமூக பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ஒன்பதாம் வகுப்பு மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரின் தண்டனையை 14 ஆண்டுகளாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்துள்ளதாகவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவர் மாதவன் (27). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பணிபுரிந்த பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, மாணவியை பள்ளிக்கு வரவழைத்து, அங்கிருந்து மூன்று நாள்கள் தனியாக வெளியில் கூட்டிச் சென்றுள்ளார்.

அப்போது மாணவியுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குடும்பத்தின் நன்மதிப்பைக் கருத்தில் கொண்டு, காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். பின்னர், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், ஆசிரியர் மாதவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், கடந்தாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ஆசிரியர் மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதவன் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, என்.ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பு:

ஆசிரியர் தொழில் என்பது மிகவும் புனிதமானது. ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மாணவர்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்துக்கும் ஆசிரியரே பொறுப்பு.

ஆனால், இந்த வழக்கு எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆசிரியர், தனது வகுப்பில் படித்த 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரின் குடும்பச் சூழ்நிலையையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் கருதி, மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 20 ஆண்டுகள் சிறை தண்டனையை 14 ஆண்டுகளாகக் குறைக்கிறோம். மேலும் விசாரணை நீதிமன்றம் விதித்த அபராதத்தை உறுதி செய்கிறோம் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com