இந்திய அளவில் கணிசமாகச் சாலை விபத்துகளைச் சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறதாம். இதில் ஆண்டுதோறும் 16,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்கிறது சாலைவிபத்துக்களுக்கான புள்ளி விவரங்கள். இதைத் தடுக்க சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது விழலுக்கு இறைந்த நீராகிறது. சாலை விபத்துக்களின் போது உயிருக்கு ஆபத்தான முறையில் படுகாயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் 1 மணி நேரத்தைத் தான் கோல்டன் ஹவர்ஸ் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த 1 மணி நேரத்தில் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் சாலை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி...இப்போது சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர்... நமது கண்ணெதிரே சாலை விபத்துக்கள் நடந்தால் உடனே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடிய மனநிலையில் இருக்கிறோம் என?
அதே போல கண்ணெதிரே நடக்கும் பாலியல் வன்முறைக் குற்றங்கள், கடத்தல் குற்றங்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக் கூட நம்மில் எத்தனை பேர் உடனடியாக காவல்துறையில் பதிவு செய்யவோ அல்லது சம்மந்தப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரிவிக்க முயற்சிக்கிறோம் என்று யோசியுங்கள்.
மேற்கண்ட சம்பவங்களில் சிறுகாயம் அல்லது சிறு பிரச்னை என்றால் நிச்சயம் பலர் உதவத்தான் செய்கிறார்கள். அதெல்லாம் அந்த ஸ்பாட்டோடு சரி. காயங்கள் அதிகமிருந்தாலோ அல்லது படுகாயங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு தப்பிய நிலையில் இருந்தாலோ... உதவக் கூடியவர்களின் எண்ணிக்கை நிச்சயம் வெகு குறைவே! காரணம் உதவியவர்களையே காவல்துறை சந்தேகிக்கக் கூடும், அல்லது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு தொகை கட்ட வேண்டியதாக இருக்கலாம். அல்லது காவல்துறை விசாரணை அது, இது என்று இழுத்தடிக்கக் கூடுமோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. இதெல்லாம் எதற்கு தேவையற்ற தலைவலிகள்? என்ற பீதியில் தான் பலரும் கூட விபத்துக் காலங்களில் உதவ மனமிருந்தும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டும் காணாமலும் சென்று விடுகிறார்கள். ஆனால், இந்த மாதிரியான பீதிகளைத் தவிர்த்து விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உதவக் கூடியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றியிருப்பது இன்று வரை எத்தனை பேருக்குத் தெரியும்?
விபத்தில் படுகாயமுற்றவர்களின் உயிர்காக்கவும், அவர்களுக்கு உதவக்கூடியவர்களை ஊக்குவிக்கவுமே இப்படி ஒரு சட்டம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த சட்டம் தான் ‘குட் சமரிட்டன் லா’ இது 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம்
இந்த சட்டத்தின்படி, நீங்கள் உங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு அசம்பாவித சம்பவத்தைக் கண்ணெதிரே காண நேர்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் (அசம்பாவிதம் என்பது இங்கே வாகன விபத்து மட்டுமே அல்ல... அது கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.) உடனடியாக அந்த அசம்பாவிதத்தை நீங்கள் காவல்துறையில் பதிவு செய்ய விரும்பினால் உங்களது பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியதில்லை என்கிறது இந்தச் சட்டம்.
அதேபோல சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்க்க நினைக்கும் நல்ல உள்ளங்கள் அப்போதும் தங்களது பெயர், முகவரி குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. முதற்கட்ட சிகிச்சைக்கான தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்கிறது இந்தச் சட்டம்.
இது மாதிரியான சம்பவங்களில் உதவக்கூடியவர்களின் பெயரைக் கூட பதிவு செய்யக்கூடாது என்கிறது ‘குட் சமரிட்டன் லா’
அதுமட்டுமல்ல மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளை பாதிக்கப்பட்டவர்களிடமும் கேட்கக் கூடாது என்கிறது இந்தச் சட்டம்.
இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறையினரிலே கூட இன்னும் கணிசமானோருக்கு இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்கிறதாம் ஒரு சர்வே.
எனவே முதற்கட்டமாக காவல்துறையினருக்கும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் இச்சட்டம் குறித்தான முதலுதவிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்கிறார் காவல்துறை உயரதிகாரி ஒருவர்.
‘குட் சமரிட்டன் லா’ சட்டத்தின் படி 911 எனும் எண்ணுக்கு அழைத்து தாம் கண்ணெதிரே காணும் அசம்பாவிதங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிப்பவர்கள் குட் சமரிட்டன் அதாவது உதவக்கூடிய நல்லிதயங்கள் என அழைக்கப்படுகிறார்கள்.