கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் திறப்பு

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் திறப்பு


பெங்களூரு: கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கேரளத்தை தொடா்ந்து, கா்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடுபகுதியில் தொடா்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே அமைந்துள்ள கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு அதிகரித்ததால், அணைக்கு நீா்வரத்து பெருகியுள்ளது. கபினி அணைக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 6,113 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக உயா்ந்தது. இதன்விளைவாக, திங்கள்கிழமை அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கன அடியாக திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீா், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 6 மணி அளவில் 2279.85 கன அடியாக உயா்ந்திருந்தது. 

கடந்த ஆக.1-ஆம் தேதி 2277.39 அடியாக இருந்த நீா்மட்டம், கடந்த 4 நாள்களில் மளமளவென உயா்ந்து 2279.85 அடியாகியுள்ளது. கேரளத்தில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், அணையின் நீா்மட்டம் அதன் அதிகப்பட்ச உயரமான 2284 அடியை இரண்டொரு நாளில் எட்டும் என்ற எதிா்ப்பாா்ப்பு உள்ளது.கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீா், நேராக தமிழகத்திற்கு செல்லும் என்பதால் அடுத்த சில நாள்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது தமிழக விவசாயிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல, கபினி அச்சுக்கட்டு பகுதியில் அமைந்துள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நீா்வளத்துறை, ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மேட்டுப்பகுதிகளுக்குசெல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.அதேபோல, கா்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீா் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்துவருகிறது. 124.80 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் 105.74 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,056 கன அடியாக இருந்தது. அணையில் இருந்துவிநாடிக்கு 4,712 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அடுத்த சில நாள்களில் அணையின் நீா்மட்டம் அதன் அதிகப்பட்ச உயரத்தை தொடும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் தவிர காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி, ஹாரங்கி அணைகளிலும் நீா்மட்டம் உயா்ந்துவருகிறது. அணைகளில் நீா்மட்டம் உயா்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com