போடி அருகே மரத்தடியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!

போடி பகுதியில் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
போடி பகுதியில் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்  ஆசிரியர்கள்.
போடி பகுதியில் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்  ஆசிரியர்கள்.


போடி:  போடி பகுதியில் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும் குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலமாக பாடங்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்லிடபேசி வழியாக நடத்தப்படும் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தொலைக்காட்சிகளில் பாடங்கள்  ஒளிபரப்பப்படும் நேரங்களில் மின் தடை ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற நேரங்களில் பாடங்களை படிக்க முடியாமலும், புரியாமலும் சிரமப்பட்டு வந்தனர்.

போடி பகுதியில் 15 ஊராட்சி கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். போடி அருகே உப்புக்கோட்டை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, பாலார்பட்டி, சடையால்பட்டி, காமராஜபுரம், கூழையனூர் உள்ளிட்ட கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவர்களின் பெற்றோர் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாது என்பதால் ஆசிரியர்கள் அந்தந்த கிராமங்களுக்கே சென்று பாடங்களை நடத்தி வருகின்றனர். கிராமங்களில் உள்ள மரத்தடிகள், திறந்தவெளி சமுதாய கூடங்களில் பாடங்களை நடத்துகின்றனர். இந்த வகுப்புகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும் பங்கேற்கின்றனர்.

மேலும் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களை குறிப்பெடுத்து வரும் மாணவர்கள் அதற்கான விளக்கங்களை பெறுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளது. 

இதுகுறித்து மாணவி சுகந்தி கூறுகையில், வீட்டில் தொலைக்காட்சியில் பாடங்களை பார்க்கும்போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. செல்லிடபேசிகளில் சிக்னல் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. தற்போது ஆசிரியர்களே முன்வந்து எங்கள் கிராமங்களுக்கே நேரில் வந்து பாடங்களை நடத்துவதால் எளிதாக படிக்க முடிகிறது. எல்லா கிராமங்களிலும் இதுபோல் ஆசிரியர்கள் நேரில் சென்று பாடங்களை நடத்தினால் உதவியாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com