விடைபெறுகின்றன வென்டிலேட்டர்கள்: கரோனா சிகிச்சையில் பயனில்லை

கரோனா பரவத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் போதுமான வென்டிலேட்டர்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வி வெவ்வேறு வகைகளில் எழுப்பப்பட்டன.
கரோனா சிகிச்சையில் இருந்து விடைபெறும் வென்டிலேட்டர்
கரோனா சிகிச்சையில் இருந்து விடைபெறும் வென்டிலேட்டர்

கரோனா தொற்று... சில மாதங்களுக்கு முன் வரை சாதாரண மக்கள் எவரும் கேள்விப்படாத ஒரு சொல்.. இன்று நாள்தோறும் கேட்கத் தவறமுடியாத சொல்லாகிப்போனது. கரோனா தொற்றுக்கு இடையே பரவத் தொடங்கிய மற்றோர் அச்சம் செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்கள்) பற்றாக்குறை.

கரோனாவுக்கான சிகிச்சையில் 'அ' என்பதுகூட என்னவென்று அறிய முடியாத ஒரு நிலையில் செயற்கை சுவாசக் கருவி மட்டுமே வெளிநாட்டு மருத்துவமனைகளில் வேத வாக்காகக் கருதப்பட்டது.  தொடக்கத்தில் இந்தியாவும் அதே மனநிலையில் அப்படியே சிந்தித்துப் பின்பற்றியது.

அதனால்தான் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் போதுமான செயற்கை சுவாசக் கருவிகள் பற்றாக்குறை பற்றியும், வசதி இருக்கிறதா? என்றும் தொடர்ச்சியாக வெவ்வேறு  வகைகளில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குக் கிடைத்த பதில்..

2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி,
நாட்டில் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளில் 7,13,986 படுக்கை வசதிகள் இருந்தன (இது 1000 பேருக்கு 0.55 படுக்கை வசதி). இதில் 5-8% தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் என்றால் எண்ணிக்கையில் 35,000 - 57,000 படுக்கை வசதிகள். இதில் 50% படுக்கை வசதிகளில் செயற்கை சுவாசக் கருவி இருக்கும் என்று கணக்கில் கொண்டால் 17,000 முதல் 25,500 செயற்கை சுவாசக் கருவிகள் இருந்திருக்கும். ஒட்டுமொத்த தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையிலும் செயற்கை சுவாசக் கருவி இருக்கும் என்று கணக்கில் கொண்டால்கூட 57,000 செயற்கை சுவாசக் கருவிகள்தான் இருந்திருக்கும் (இது ஒரு தோராய மதிப்பீடு).

உடனடியாக உலகம் முழுவதும் செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை அதிகரித்தது. இந்தியாவிலும் செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் கணக்கில் எடுக்கப்பட்டன. பாதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையோடு செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை மிக சொற்பமாக இருந்தது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் அனைவருக்குமே செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் என்ற எண்ணமும் அதற்குக் காரணியாக அமைந்தது. நல்லவேளையாக இந்தியாவில் அப்படியான ஒரு நிலை ஏற்படவேயில்லை.

போதுமான  செயற்கை சுவாசக் கருவிகள் இல்லை என்பதால் உள்நாட்டிலேயே குறைந்த விலையில் தயாரிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. ஒரே செயற்கை சுவாசக் கருவியில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இது கரோனா தொற்றுப் பரவலின் ஆரம்ப கட்டத்தில் கிடைத்த தகவல்கள்.

ஆனால், உலக நாடுகள் கருதியது போல கரோனா தொற்று சிகிச்சைக்கும் செயற்கை சுவாசக் கருவிகளின் தேவைக்கும் பெரியளவிலான தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

கரோனா தொற்றுக்கு உள்ளாகி மிகவும் அபாயகட்டத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிப்பதில் பெரிய அளவில் பலன் கிட்டவில்லை என்பதை பெரும்பாலான மருத்துவமனைகள் ஆரம்பத்திலேயே  புரிந்துகொண்டன. செயற்கை சுவாசக் கருவிகளால் கரோனா நோயாளிகளின் மரணத்தை ஓரிரு நாள்கள் தள்ளிப்போடவே முடிந்தது. இதற்கு மாற்று, அதுவரை மருத்துவர்களுக்கு வேறெதுவும் பிடிபடவில்லை.

இந்த நிலையில்தான் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனை அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட கரோனா நோயாளிகளில் 97% பேர் உயிர் பிழைக்கவில்லை. இந்த உயிரிழப்பு விகிதம் பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி மற்றும் கரோனா பலியில் உச்சத்தில் இருக்கும் நாடுகளைவிட மிக அதிகம்.

பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவமனை, ஏப்ரல் மாதத்திலிருந்து நகரின் முதல் கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இங்கு 1,500 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில் 92 பேருக்கு மட்டுமே செயற்கை சுவாசக் கருவி தேவைப்பட்டது. உயிரிழந்த 91 பேரில் 89 பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்றவர்கள்.

பெங்களூருவிலேயே வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத  அளவுக்கு விக்டோரியா மருத்துவமனையில்தான் அதிகளவிலான செயற்கை சுவாசக் கருவி வசதி இருந்தது.

இதே நிலைதான் நாட்டில் பரவலாகக் காணப்பட்டது. இதன் மூலம் ஜூலை மத்தியில், கரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிப்பதில் பெரிதாகப் பயனில்லை என்பதை மருத்துவர்கள் உறுதியாக நம்பினர். அதேவேளை அடிப்படை சுவாசக் கருவி (பேஸிக் ரெஸ்பிரேட்டரி சப்போர்ட் ) மூலம் சிகிச்சை பெற்றவர்களில் 80 சதவிகித நோயாளிகள் குணமடைந்தனர்.

கரோனா சிகிச்சை குறித்த தொடர் ஆய்வுகளில் சீனா, இத்தாலி மற்றும் அமெரிக்காவிலும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகளில் மரண விகிதமானது 50% முதல் 97% வரை இருந்தது. கரோனாவால் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருந்த இத்தாலியில் கூட செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் 65% ஆக இருந்தது.

சமீபத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பஞ்சாப் மாநிலத்தில், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட கரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் 90 சதவிகிதமாக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே முதியவர்கள், வேறு உடல் நலப் பிரச்னைகளோடு இருப்பவர்களுக்கு கரோனா பாதித்து, உடல்நிலை கவலைக்கிடமான பிறகு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் இந்திய மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலர் டாக்டர் பரம்ஜித் மன் இதுபற்றி விளக்கும்போது, ஒரு நோயாளியின் நுரையீரல் அதன் இயக்கத்தை நிறுத்தி, மூச்சுவிட முடியாத நிலையை அடையும்போதுதான் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால் அதற்குள், கரோனா தொற்றானது சரி செய்ய முடியாத அளவுக்கு நோயாளியின் உடல்நிலையை மோசமடையச் செய்துவிட்டிருக்கும். அதனால்தான் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகளின் உயிர் பிழைக்கும் வாய்ப்பானது குறைவாக உள்ளது. கரோனா பலியைக் குறைக்க விரைவாக பரிசோதனை செய்து முன்னதாகவே தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் கரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி என்பது முதல் வாய்ப்பாக இருக்காது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு விரைவாக செயற்கை சுவாசக் கருவி பொருத்துவது என்ற முடிவைக் கைவிட்டு, சிகிச்சையில் பெரிய மாற்றத்தை மருத்துவர்கள் கையாண்டு வருகிறார்கள். அதுதான் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை சுவாசக் கருவி.

இது கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை அறியப்பட்டுவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 0.3% பேருக்கு மட்டுமே செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதை மேலும் உறுதி செய்யும் வகையில், மும்பையைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், நியூ யார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கரோனா நோயாளிகளில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டவர்களில் 80% பேர் குணமடையவில்லை என்ற தகவல் கிடைத்திருப்பதாகவும், அடிப்படை ஆக்ஸிஜன் சுவாசக் கருவியைக் கொண்டு சிகிச்சை அளிப்பதே பலனளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கரோனா பேரிடரின் ஆரம்ப காலத்தில் மிக முக்கியமாகக் கருதப்பட்ட செயற்கை சுவாசக் கருவி, கரோனாவுக்கு எதிரான போரில் பெரியளவில் பலனளிக்கவில்லை என்பது சுமார் ஆறு மாதக் காலத்துக்குப் பின் அறியப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று அடிப்படை சுவாசக் கருவிகள்தான் என்று கண்டறியப்பட்டதோடு, இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளாவோரில் செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் விகிதம் மிகக் குறைவாகவே இருப்பதும் நம்பிக்கை தரும் செய்தியாக உள்ளது.

ஒருவழியாக செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை பற்றிய அச்சம் ஒழிந்து மாற்று ஏற்பாடுகளைக் கண்டடைந்துவிட்டார்கள் மருத்துவர்கள் - ஏனெனில், கரோனா பரவத் தொடங்கியபோது, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்தே இருந்த செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை வெறும் 3,371 மட்டுமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com