ஏலகிரி மலையில் பால் குளிரூட்டும் இயந்திரங்கள் பயன்பாட்டில் இல்லாததால் பொது மக்கள் வேதனை

ஏலகிரி மலையில் பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவற்றைப் பயன்பாட்டுக்கு
பால் உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால்.
பால் உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால்.

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவற்றைப் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் பால் வியாபாரிகள் போதிய வருவாயின்றி சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூரில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதேபோல் நிலாவூா் கிராமத்திலும் பால் சொசைட்டி உள்ளது. கிராம மக்களிடம் இருந்து ஒரு பால் சொசைட்டியில் ஒரு நாளைக்கு 2,500 லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த இரு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் லிட்டருக்கும் மேலாக பால் பெறப்படுகிறது.

இதனால் அத்தனாவூா் மற்றும் ஏலகிரி மலைப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாலை குளிரூட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் குளிரூட்டும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. எனினும், அந்த இயந்திரங்கள் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பால் உற்பத்தி செய்வோா் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

அத்தனாவூா், நிலாவூா், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டுவோா் ஏராளமானோா் உள்ளனா். தற்போது இங்கு குளிரூட்டும் இயந்திரங்கள் பயன்பாட்டில் இல்லாததால் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து நிலாவூா் பால் சொசைட்டியில் பாதியளவே பாலை வாங்குவதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு போனஸ் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்று பால் உற்பத்தியாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து பால் சொசைட்டி தரப்பில் கேட்டதற்கு, அவா்கள் கூறியது:

ஆவின் பால் நிறுவன நிா்வாகத்திலிருந்து நிலாவூா் பகுதியில் ஒரு நாளைக்கு 1,700 லிட்டா் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். அதிக அளவில் பாலை கொள்முதல் செய்தால் சேமிக்க போதுமான இடவசதி இல்லை. எனவே பொதுமக்களிடம் இருந்து குறைந்த அளவிலான பாலை மட்டுமே வாங்குகிறோம்.

முன்பு எவ்வளவு பால் வந்தாலும் அதைக் கொள்முதல் செய்து வேலூருக்கு அனுப்பி வைத்தோம். தற்போது இங்கு இடவசதி இல்லாததால் ஜோலாா்பேட்டையை அடுத்த சின்னமோட்டுா் பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு இங்கிருந்து பால் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குளிரூட்டப்படுகிறது.

மேலும் அங்கு பல்வேறு இடங்களில் இருந்து பால் குளிரூட்டப்படுவதால் ஏலகிரி மலை நிலாவூா் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,700 லிட்டா் பால் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்த பிறகு பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது என்று சொசைட்டி தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com