'கரோனா ஒரு பெருந்தொற்று என்பதைத் தளர்வுகளால் மறக்க வேண்டாம்'

மக்கள் கரோனா தற்காப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததே தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான முக்கிய காரணம். தளர்வுகளுக்கிடையே கரோனா ஒரு பெருந்தொற்று என்பதை மறந்துவிட வேண்டாம்.
'தளர்வுகளால் கரோனா ஒரு பெருந்தொற்று என்பதை மறக்க வேண்டாம்'
'தளர்வுகளால் கரோனா ஒரு பெருந்தொற்று என்பதை மறக்க வேண்டாம்'

மக்கள் கரோனா தற்காப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததே தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தளர்வுகளுக்கிடையே கரோனா ஒரு பெருந்தொற்று என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லி சுகாதாரத் துறை சார்பில் பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அதிக பரிசோதனைகளின் மூலம் தொற்று பரவலைக் கண்டறிந்து தீவிரமான பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் மருத்துவ பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனினும் தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

தில்லியில் கரோனா பரிசோதனைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து ஒரு வாரம் கழித்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக முதல்வர் கேஜரிவாலும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைவிட தில்லியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு கரோனா தடுப்புக்கு உடனடி ஒத்துழைப்பு வழங்காமல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறு கடும் நெருக்கடியான சூழலைக் கடந்து தில்லியில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டன. எனினும் கரோனா பரவும் விகிதம் தில்லியில் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள், தில்லியில் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவதுமே தொற்று பரவல் அதிகரிப்பதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய அளவில் கரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், அதற்கேற்ப தளர்வுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாலும், நாட்டில் பெருந்தொற்று அபாயம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான வெகுஜன மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக அதிக அளவிலான இளைஞர்கள் தளர்வுகளால் நிறைவு அடைந்துள்ளனர்.

தில்லியின் மிகப்பெரிய கரோனா தடுப்பு மையமாக உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையின் இயக்குநர் பி.எல்.ஷெல்வால் இதுகுறித்து கருத்துத்  தெரிவித்துள்ளார்.

"அதிக அளவிலான இளைஞர்கள் எந்தவித கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் வெளியே செல்வது அதிகரித்துள்ளது. கடைகளிலும், சாலையோரங்களிலும் குழுவாக அமர்ந்து பொழுதைக்  கழிப்பதைப் போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பார்க்க முடிகிறது. இது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இளைஞர்களும் வெகுஜன மக்களுக்குத் தவறான தகவலை உணர்த்துகின்றனர். 

இது மக்களிடையே கரோனா பரவல் முற்றிலும் ஒழிந்துவிட்டதைப் போன்ற வேறு ஒரு பார்வையை உண்டாக்கும். இதனால் கரோனா தொற்று தற்போது இருப்பதைவிட அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது."

"மக்கள் முகக் கவசங்களை அணியாமல் வீடுகளைவிட்டு வெளியே வருவது அதிகரித்து வருகிறது. ஒருசிலர் முகக்கவசங்களை அணிந்திருந்தாலும், தங்களது கன்னங்களுக்கு மட்டுமே அணிந்துள்ளனர். மூக்கை மறைத்து முகக்கவசங்களை அணிந்துகொண்டு வெளியே வருவதில்லை. 
பாதுகாப்பு அம்சங்களை சற்றும் குறைக்காமல், தடுப்பு நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று மருத்துவர் பி.எல்.ஷெல்வால் அறிவுறுத்துகிறார்.

மற்றொரு தனியார் மருத்துவமனையின் உள்மருத்துவ ஆலோசகர் சுர்ஜித் சாட்டர்ஜி கூறுகிறார்: ''பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில் துறைகளுக்கு பெருமளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் பேச்சு அதிகரித்துள்ளது. தில்லி கரோனா பரவலுக்கு இதுவும் முக்கிய காரணம். 

தில்லியில் ஜூன் மாதத்துக்கு முன்பு வரை தொற்று பரவல் சீராக இருந்தது. ஜூன் மாதத்தில் தொழில்துறைகளுக்குப் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதன் விளைவாக ஜூலை மாதத்தில் அதிக அளவிலான நடுத்தர வயதுடைய மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவது பதிவானது.

எனினும், கரோனா பரவலை மக்கள் மருத்துவ அவசரநிலையாகப் பார்க்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மக்களிடையே தொற்று குறித்து மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இது மற்ற மக்களைத் தவறாக வழிநடத்திவிடக்கூடாது.

1918-ஆம் ஆண்டு கடும் விளைவுகளை ஏற்படுத்திய ஸ்பானிஸ் ஃபுளூ, கட்டுப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், சில மாதங்களில் மீண்டும் இரண்டாவது முறையாக மக்களிடையே கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதைக் கருத்தில்கொண்டு மக்கள் கரோனா தொற்று தடுப்பு நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''

தில்லி அரசு மருத்துவரான மகேஷ் வர்மா, "தில்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளின் சிகிச்சை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எனினும் வேறு ஒரு ஆலோசனையும் முன்வைக்கப்படுகிறது. அதாவது கரோனா வைரஸின் திரிபு சுழற்சி வீரியம் குறைவாக உள்ளதால், பாதிப்புகள் அதிகரிக்கிறது. எனினும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. இது நீண்ட நாள்களுக்கு நம்மிடையே வைரஸ் இருப்பதற்கு வழிவகுக்கும். இனி எந்தத் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், அவை கரோனா தடுப்பு நடைமுறைகளுக்கு உள்பட்டே இருக்க வேண்டியது அவசியம்'' என்று கூறினார்.

கரோனா பரவலுக்கு படிக்காதவர்களைவிட படித்தவர்களே மிக முக்கிய காரணமாக அமைகின்றனர். 

இது குறித்து பேசிய பிளாஸ்மா வங்கி மருத்துவர் மீனு பாஜ்பாய், கல்வி கற்றவர்களும் சமூக அக்கறையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். படித்த சிலரும் சமூக அக்கறையுடன் செயல்படத் தவறுகின்றனர். பொறுப்புணர்வு சிறிதுமின்றி உபயோகப்படுத்திய பொருள்களைத்  திறந்தவெளியில் குப்பையில் வீசுகின்றனர். கற்ற கல்வியின் மதிப்பை வெளிப்படுத்துவதற்குப் பெருந்தொற்று பரவி வரும் இந்த சூழலே சிறந்த தருணம். திறந்தவெளியில் மற்றவருடன் சேர்ந்து உண்பதும், குடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியவை என்று தெரிவித்தார்.

தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் அதிக அளவிலான இளைஞர்கள் நிறைவு பெற்றுள்ளனர். அரசின் இந்த தளர்வு அறிவிப்பு பெருந்தொற்றை மறக்கச் செய்து இளைஞர்களை அதிக அளவில் வெளியே வரச்செய்யும். கரோனா தொற்றால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தியால் அவர்கள் விரைவில் நலம்பெறக் கூடும். ஆனால், அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள குழந்தைகளும், அவர்களது வீட்டில் உள்ள முதியவர்களுமே அதிக பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். 

இது குறித்து லால் பாத் லேப்ஸ் நிர்வாகத் தலைவர் அரவிந்த் லால் கூறுகையில், கரோனாவுக்கு இதுவரை மருந்து உறுதிசெய்யப்படவில்லை. நாம் இன்னும் மருத்துவ அவசரநிலையில் தான் இருக்கிறோம். அதனை மறந்துவிடக்கூடாது என்றார்.

சுருக்கமாகச் சொன்னால் கரோனா விஷயத்தில் மக்கள் இனியும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com