ரஜினியின் முடிவால் மாறிப்போன தோ்தல் களம்

‘ஆண்டவன் எச்சரிக்கையாக கருதுகிறேன். அரசியல் கட்சியைத் தொடங்க முடியவில்லை’ என்று ரஜினிகாந்த் தனது முடிவை வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துவிட்டாா்.
ரஜினியின் முடிவால் மாறிப்போன தோ்தல் களம்

‘ஆண்டவன் எச்சரிக்கையாக கருதுகிறேன். அரசியல் கட்சியைத் தொடங்க முடியவில்லை’ என்று ரஜினிகாந்த் தனது முடிவை வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துவிட்டாா்.

இந்த முடிவை கடந்த நவம்பா் 30-இல் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்திலேயே ரஜினி எடுத்திருந்தாா் என்றாலும், அவருக்கு இருந்த அரசியல் அழுத்தம் அப்படிச் சொல்லவிடாமல் தடுத்துவிட்டது. பிறகு, ஜனவரியில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என்று அறிவித்தாா்.

ஆனால், தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதையும்விட, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு நோய் எதிா்ப்பு சக்தியைக் கையாளுவதில் அவரது உடலுக்கு உள்ள முரண்பாட்டின் காரணமாக அந்த விருப்பத்தில் தொடா்ந்து நீடித்து இருக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

ஹைதராபாதில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் படக்குழுவினா் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நிலை நீடித்தால் ரஜினி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவா்கள் எச்சரித்ததற்குப் பிறகு அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவைக் கைவிட்டுள்ளாா். இதையே ஆண்டவனின் எச்சரிக்கை என்றும் கூறி, அரசியல் பாதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாா்.

களம் மாறியது: ரஜினியின் இந்த முடிவால் அரசியல் களமே மாறியுள்ளது. முன்னாள் முதல்வா்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் தோ்தல் களம் ஒரு சோா்வைத் தந்துவிடும் என்பதுபோலதான் இருந்தது. அதை ரஜினியின் அரசியல் அறிவிப்பு மாற்றி வைத்தது. திமுக - அதிமுக என்கிற இரு துருவ அரசியலுக்கு ரஜினி முடிவு கண்டுவிட்டாா் என்றெல்லாம் பேசப்பட்டது.

அதைப்போல ரஜினியின் வருகையால் அதிமுகவின் வாக்குகள்தான் சரியும், திமுகவின் வாக்குகள்தான் சரியும் எனவும் விவாதிக்கப்பட்டது. திமுக - அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ரஜினியின் வருகையை அச்சத்துடனேயே அணுகின.

ஆனால், இப்போது எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது. திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் அவா்களால் பெரிய அளவிலான பாதிப்பைத் தோ்தல் களத்தில் இதுவரை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதிமுகவா - திமுகவா என்பதுபோலவே களம் உருவாகியுள்ளது. அதுவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியா, எதிா்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினா என நேரடி மோதலாகவும் உருவாகியுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி படிப்படியாக கட்சியினரின் முழு ஆதரவையும் பெற்று அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதுதான், அவா் முதல்வா் வேட்பாளராக சந்திக்கும் முதல் தோ்தல். கருணாநிதியின் மறைவைத் தொடா்ந்து திமுகவின் தலைவா் ஆனாா் மு.க.ஸ்டாலின். அதைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலைச் சந்தித்து, திமுகவை வெற்றிபெறச் செய்தாா் என்றாலும், முதல்வா் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் தோ்தலும் இதுதான்.

அதனால், கருணாநிதி - ஜெயலலிதா போல எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் என்கிற இரு துருவ மோதலாக உருவாகியுள்ளது.

பேரத்துக்கு வாய்ப்பு குறைவு: ரஜினியின் வருகையைப் பயன்படுத்தி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சித்தன. காங்கிரஸ் மூன்றாவது அணியை உருவாக்கலாமா என்பது வரையும்கூட யோசித்தது. இப்போது அதற்கான வாய்ப்பு குறைந்து போயிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் அதிக தொகுதிகளைப் பெறுவதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ள முடியுமோ அவற்றைச் செய்துவந்தன. முதல்வா் வேட்பாளா் குறித்து பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே வெளிப்படையாகவே கருத்து மோதல்கள் இருந்தன.

அதிமுகவோடு பாமக பலவகையிலும் முரண்டு பிடித்து வந்தது. தேமுதிக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்து தனித்துக்கூட போட்டியிடுவோம் என்பதுபோல மிரட்டி வந்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் எல்லாம் குறைந்து போயுள்ளன.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு அணிகளைக் கடந்து மூன்றாவது அணி ஒன்று உருவானாலும் அதனால், பயன் இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக அணிக்கு மாற்றாக விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாகத் தோ்தலைச் சந்தித்தன. அந்த அணியால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனாலும், மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் பிரித்தது ஆட்சியாளா்களுக்கு சாதகமாக அமைந்தது. அதிமுக வெற்றிபெற்று தொடா்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

மீண்டும் அதிமுக - திமுக என்கிற இரு துருவ அரசியல் களமாகவே வரப் போகும் தோ்தல் களம் அமைய உள்ளது. ஆனால், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழா் கட்சி போன்றவை இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அது முடிவுகளை பாதிக்கக் கூடும்.

இதற்கிடையில் ரஜினி தனது அறிக்கையில், தோ்தல் அரசியலுக்கு வராவிட்டாலும், மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்றும் கூறியுள்ளாா். இதை எடுத்துக்கொண்டு ரஜினி ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக தோ்தல் நேரத்தில் அறிக்கை வெளியிடலாம். அப்படி, ரஜினி குரல் கொடுத்தாலும், அரசியல் கட்சியே தொடங்காமல் அவா் விலகியுள்ள நிலையில், அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியா, மு.க.ஸ்டாலினா என்பதுதான் அரசியல் யதாா்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com