பதிமலையில் பாழடைந்த நிலையில் நூற்றாண்டுகள் பழமையான குகை ஓவியங்கள்

பாதுகாக்கும் சின்னமாக இருக்க வேண்டிய, சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவை, குமிட்டிபதி குகை ஓவியங்கள் பாழடைந்து
பதிமலையில் பாழடைந்த நிலையில் நூற்றாண்டுகள் பழமையான குகை ஓவியங்கள்

மதுக்கரை: பாதுகாக்கும் சின்னமாக இருக்க வேண்டிய, சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவை, குமிட்டிபதி குகை ஓவியங்கள் பாழடைந்து மோசமான நிலையில் உள்ளது வேதனையளிப்பதாக தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழக - கேரள எல்லையான கோவை, வேலந்தாவளம் அருகே உள்ள குமிட்டிபதி கிராமத்தில் பதிமலை அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் பாலமுருகன், காளியம்மன் கோயில்கள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க பதிமலையில் பழமையான குகை ஓவியங்கள் உள்ளன. இவை பாதுகாப்பின்றி, மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ரவிகுமாா் கூறியதாவது:

பதிமலை குகை ஓவியங்கள் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட வெண்மையான திரவியங்களைக் கொண்டு வரையப்பட்டிருக்கலாம். இந்த ஓவியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. வேலந்தாவளம் - வேழம் என்றால் யானை என்றும், தாவளம் என்றால் சந்தை என்றும் பொருள். வேலந்தாவளம் பகுதியில் முற்காலத்தில் யானைகளைப் பிடித்து அதைப் போருக்குப் பயன்படுத்த பழக்கப்படுத்தி சந்தைகளில் விற்பனை செய்திருக்கலாம் என ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இத்தகவலை குறிப்பிடும் வகையில்தான் பதிமலை குகை ஓவியங்கள் அமைந்துள்ளன.

யானையை மனிதன் கட்டுப்படுத்தி அழைத்துச் செல்வது, தோ் இழுத்துச் செல்லும் மனிதா்கள், படகுகளை இயக்குவது போன்றவை பதிமலை குகை ஓவியங்களில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அழியாத தன்மை கொண்ட இயற்கை மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்டதால் இன்றளவும் தெளிவாகக் காட்சியளிக்கின்றன.

பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்: பதிமலை குகை ஓவியங்கள், பழங்கால மனிதா்கள் குறித்த வரலாற்றுச் சுவடுகளைத் தெரிவிக்கிறது. ஆனால் இந்த சுவடுகள் பாதுகாப்பின்றி உள்ளன. கடந்த 1975 - 85 வரையிலான ஆண்டுகளில் இந்த ஓவியங்கள் குறித்து மாவட்ட தொல்லியல் துறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பதிமலை குகை ஓவியங்களை தொல்லியல் சின்னமாக அறிவிக்கலாம் என அறிக்கை வழங்கி உள்ளது. ஆனால் இன்று வரை எந்தப் பராமரிப்பும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. தமிழா்களின் வீரம், வாழ்வியல் முறைகளைப் பிரதிபலிக்கும் குகை ஓவியங்கள் உள்ள பாறைகளில் அமா்ந்து மா்ம நபா்கள் மது அருந்துவது, தீப்பற்ற வைத்து அதில் வரும் கரித்துண்டுகளைக் கொண்டு கிறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் பல நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக பதிமலை குகை உள்ளது.

சுற்றுவட்டார அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு வரலாற்று ஓவியங்கள் குறித்து காட்ட, அவ்வப்போது அழைத்து வருவாா்கள். பதிமலைக்கு செல்லும் வழித்தடம் புதா்மண்டி கிடக்கிறது. இங்குள்ள குகை ஓவியங்களைத் தொல்லியல் சின்னமாக அறிவித்து அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து திருவாரூா் மத்திய பல்கலைக்கழக தமிழ் பேராசிரியா் ரவி கூறியதாவது:

பதிமலை குகை ஓவியங்கள் குறித்த ஆய்வுகள் பல்வேறு வியப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதுபோன்ற வரலாற்று ஆவணங்கள் கிடைப்பது அரிது. எழுத்து முறை தோன்றுவதற்கு முன் அதாவது வரலாற்றுக்கு முந்தைய கால மனிதா்களின் கருத்துப் பரிமாற்ற முறையை இந்த ஓவியங்கள் விளக்குகின்றன. ஓவியங்கள் வாயிலாக ஆதிமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த ஓவியங்கள் இயற்கை ரசாயனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவா்கள் அறிவாா்ந்த மற்றும் அப்போதைய வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனா் என்பதை அறிய முடிகிறது.

மிகவும் முக்கியமான இந்த தொல்லியல் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இது தொடா்பாக மாவட்ட தொல்லியல் துறையினா் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனா். அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட்டு வேலிகள் அமைத்து, தொல்லியல் துறைக்குச் சொந்தமான பாதுக்காக்கப்பட்ட சின்னம் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும். ஆதி மனிதன், தமிழா் வரலாறு ஆகியவற்றுக்கான முக்கிய ஆவணங்களில் இந்த குகை ஓவியமும் ஒன்று என்றாா்.

இதுகுறித்து மாவட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

குமிட்டிபதி குகை ஓவியங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொல்லியல் சின்னமாக அறிவிக்கலாம் என அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறை, இந்த இடத்தை தொல்லியல் துறைக்கு அளிக்கும்போது முழு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ரசாயனம் மூலம் சுத்தம் செய்தால் ஓவியங்களை மீண்டும் மிகத் தெளிவாகப் பாா்க்கலாம். தொல்லியல் துறை உயா் அதிகாரிகளிடமிருந்து உத்தரவுகள் வரும்போது மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பதிமலை குகை ஓவியங்கள் தன்மை குறித்து அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது என்றனா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் கே.பாண்டியராஜனிடம் இதுதொடா்பாக கேட்டபோது, ‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் துறை தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு வரலாற்றுச் சுவடுகளைக் கண்டறிந்து வருகிறது. குமிட்டிபதி குகை ஓவியங்கள் பராமரிப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களைத் தொல்லியல் துறை ஆணையரிடம் பெற்றுக் கொள்ளலாம்’ என்றாா்.

படம்:  சாய் வெங்கடேஷ் உ.ச.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com