தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத்துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்: ஒளவையார் விருது பெற்ற கண்ணகி

தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத்துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தைரியம், தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது என்று ஒளவையார் விருது பெற்ற கண்ணகி கூறினார்.
தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத்துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்: ஒளவையார் விருது பெற்ற கண்ணகி

தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத்துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தைரியம், தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது என்று தமிழக அரசின் ஒளவையார் விருது பெற்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிக்கை, நிர்வாகம், சமூகத்துக்கு தனித்துவமான பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து ஒளவையார் விருது, தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது திருவண்ணாமலை நகராட்சிக்குச் சொந்தமான எரிவாயு தகன மேடையின் பொறுப்பாளராகப் பணிபுரியும் ரா.கண்ணகிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற விழாவில் கண்ணகிக்கு ஒளவையார் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் எடை கொண்ட தங்கப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வழங்கிப் பாராட்டினார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு என வழங்கப்பட்டு வந்த இந்த விருதை இப்போது திருவண்ணாமலை, தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த கண்ணகி பெற்றுள்ளார். இவர், 2013-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் திருவண்ணாமலை மகாதீபம் மக்கள் நல அறக்கட்டளை மூலம் நகராட்சிக்குச் சொந்தமான எரிவாயு தகன மேடையின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். 

தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது குறித்து கண்ணகி கூறுகையில், நான் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தேன். படித்து முடித்ததும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எல்ஐசியில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது. 

அப்போது எனக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் எல்ஐசி வேலையைத் தொடர முடியவில்லை. எனவே, திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை புதிதாக தொடங்குவது, மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்துக்கான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். எரிவாயு தகன மேடை பொறுப்பாளர் பணி கிடைத்த பிறகு பணியாகக் கருதாமல், சேவையாக எண்ணி பணி செய்து வருகிறேன். 

தகன மேடைக்கு வரும் சடலங்களின் விவரங்களைப் பதிவு செய்வது, சடலங்களை தகன மேடையில் வைத்து எரிப்பது, எரிந்த பிறகு எஞ்சி நிற்கும் சாம்பலை கலசத்தில் சேகரித்து இறந்தவர்களின் உறவினர்களிடம் கொடுத்து அனுப்புவது போன்ற பணிகளை செய்து வருகிறேன். இதுவரை 2,525 சடங்களை நான் எரித்துள்ளேன். இதில் ஆதரவற்ற சடலங்களின் எண்ணிக்கை ஏராளம்.

பொதுவாக சடலங்களைப் பார்த்தாலே பெண்கள் பயந்து நடுங்குவர். ஆனால் எனக்கு இருந்த தைரியம், தன்னம்பிக்கையால் இந்தப் பணியை திறம்பட செய்து வருகிறேன். தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எந்தத்துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட கஷ்டமான நேரத்திலும் பெண்கள் தைரியம், தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது.

இதைக் கடைப்பிடித்தாலே பிரச்னைகளையும் கடந்து வாழ்க்கையின் எந்த உச்சிக்கும் செல்லலாம். என் கணவர் ராதாகிருஷ்ணன், மகள் பாலகுரு, மகள் ராகவி ஆகியோர் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்து என்னுடைய இந்தப் பணிக்கு உதவியாக இருந்தனர். தமிழக அரசு எனக்கு அளித்துள்ள விருதை எனக்குக் கிடைத்த விருதாக நான் கருதவில்லை.

தமிழகத்தில் அரசு, தனியார் பணிக்குச் செல்லும் பல லட்சம் பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன். இதன் மூலம் மயானப் பணியிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. சேவைக்குக் அங்கீகாரம் கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, விருதுக்குப் பரிந்துரை செய்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com