முகப்பு தற்போதைய செய்திகள் சிறப்புச் செய்திகள்
உள்ளூரில் விளையும் நாட்டுரக பழங்களை வாங்கி சுவைப்பதில் மக்கள் ஆர்வம்
By பெரியார்மன்னன் | Published On : 04th October 2020 02:53 PM | Last Updated : 04th October 2020 02:53 PM | அ+அ அ- |

வாழப்பாடியில் அமோகமாக விற்பனையாகும் மருத்துவ குணம் கொண்ட உள்ளூரில் விளையும் நாட்டுரக பழங்கள்.
வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலால், மருத்துவ குணம் கொண்ட நாவல், சீத்தா, கிலா, விளான், நெல்லி, இலந்தை,கொய்யா, பப்பாளி ஆகிய உள்ளூரில் விளையும் நாட்டு ரக பழங்களை விரும்பி வாங்கி சுவைப்பதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
உடல் நிலை பாதிக்கப்படுவோர் மட்டுமின்றி, உடல் வலிமையையும், நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்க செய்து, ஆரோக்கியமாக வாழ்வதற்கும், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, சப்போட்டா, திராட்டை, ஜெர்ரி, வீரிய அத்தி ஆகிய பழங்களை வாங்கி சுவைப்பது, பெரும்பாலான மக்களிடையே பழக்கமாக இருந்து வருகிறது. சராசரியாக ஒரு கிலோ பழத்திற்கு ரூ.100 க்கு மேல் விலை கொடுத்து வாங்கி உண்டு வருகின்றனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளோர், நண்பர்கள், உறவினர்கள், உயரதிகாரிகள், தலைவர்களை பார்க்க செல்லும் போது, மேற்காணும் பழங்களை வாங்கிச் சென்று கொடுப்பது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. இது கெளரவமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலால் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு மட்டுமின்றி, உணவு முறைகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, திராட்டை உள்ளிட்ட உயர்ரக பழங்களை விட, உள்ளூரில் விளையும் மருத்துவ குணம் கொண்ட நாவல், சீத்தா, கிலா, விளான், நெல்லி, இலந்தை,கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை விரும்பி வாங்கி சுவைப்பதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன் பாளையம், ஆத்துார், நரசிங்கபுரம், தலைவாசல், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பழக்கடைகள் தோறும் உள்ளூரில் விளையும் நாட்டு ரக பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இதுகுறித்து வாழப்பாடியைச் சேர்ந்த பழ வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
‘கரோனா தொற்று பரவல் பொது முடக்கத்திற்கு முன் வரை, விலை கூடுதலாக இருப்பீனும் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழங்களையே மக்கள் வாங்கிச் சென்றனர். கடந்த சில மாதங்களாக மருத்துவ குணம் கொண்ட நாவல், சீத்தா, கிலா, விளான், நெல்லி, கொய்யா, இலந்தை, பப்பாளி ஆகிய உள்ளூரில் விளையும் நாட்டு ரக பழங்களை வாங்கி சுவைப்பதிலேயே பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கரோனா தொற்று பரவலை எதிர்ப்பதற்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனும், ஊட்டசத்துக்களும் உள்ளூர் நாட்டு ரக பழங்களில் நிறைந்திருப்பதாக பொதுமக்களிடையே தகவல்கள் பரவிவருவதே இதற்கு காரணமாகும். கடந்த இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், மக்கள் விருப்பத்திற்கேற்ற உள்ளூர் ரக பழங்கள் அதிகளவில் விளைந்து விலை குறைவாக கிடைப்பது குறிப்பிடதக்கதாகும்.
கிராமப்புற பொதுமக்கள் மட்டுமின்றி நகர்ப்புற வாசிகிளும் இயற்கையாக விளையும் உள்ளூர் ரக பழங்களை விரும்பி வாங்கி சுவைக்க தொடங்கியிருப்பது, தேவையான நல்ல மாற்றம் தான்’ என்றனர்.