ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் மட்டும் 67,279 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற உயா்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில் சுமாா் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமரசத் தீா்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகள் வழியாக வழக்குகளுக்குத் தீா்வு காண்பது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை ஓரளவுக்கே குறைத்துள்ளது.
நிலுவை வழக்குகள் பிரச்னையை சமாளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகளைத் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது தொடா்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, உயா்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
உயா்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 224 (ஏ) பிரிவு அனுமதி அளிக்கிறது. அதன்படி, குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்று உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தற்காலிக நீதிபதிகளை நியமிக்க முடியும். ஆனால், இந்த நடைமுறை தற்போது அமலில் இல்லை.
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவைக் கடந்தவுடன், தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது தொடா்பான வழிமுறைகள் வகுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. முழு நேர நீதிபதிகளை நியமித்த பிறகே தற்காலிக நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கடந்த ஏப்.1-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்திலும் மாநில உயா்நீதிமன்றங்களிலும் மொத்தமாக 416 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
உச்சநீதிமன்றம்
அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள்-34
காலியிடங்கள் -5
உயா்நீதிமன்றம் | அனுமதிக்கப்பட்ட நிரந்தர நீதிபதிகள் | அனுமதிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகள் | மொத்தம் | நிரந்தர நீதிபதி காலியிடங்கள் | கூடுதல் நீதிபதி காலியிடங்கள் | மொத்தம் |
அலகாபாத் | 120 | 40 | 160 | 28 | 29 | 57 |
ஆந்திரம் | 28 | 09 | 37 | 09 | 09 | 18 |
மும்பை | 71 | 23 | 94 | 24 | 08 | 32 |
கொல்கத்தா | 54 | 18 | 72 | 24 | 16 | 40 |
சத்தீஸ்கர் | 17 | 05 | 22 | 04 | 02 | 06 |
தில்லி | 45 | 15 | 60 | 14 | 15 | 29 |
குவாஹாட்டி | 18 | 06 | 24 | 01 | 03 | 04 |
குஜராத் | 39 | 13 | 52 | 09 | 13 | 22 |
ஹிமாசல பிரதேசம் | 10 | 03 | 13 | 0 | 03 | 03 |
ஜம்மு-காஷ்மீர்-லடாக் | 13 | 04 | 17 | 02 | 04 | 06 |
ஜார்க்கண்ட் | 19 | 06 | 25 | 03 | 06 | 09 |
கர்நாடகம் | 47 | 15 | 62 | 17 | (-04) | 13 |
கேரளம் | 35 | 12 | 47 | 06 | 01 | 07 |
மத்தியபிரதேசம் | 40 | 13 | 53 | 15 | 13 | 28 |
சென்னை | 56 | 19 | 75 | 04 | 09 | 13 |
மணிப்பூர் | 04 | 01 | 05 | 0 | 0 | 0 |
மேகாலயம் | 03 | 01 | 04 | 0 | 0 | 0 |
ஒடிஸா | 20 | 07 | 27 | 05 | 07 | 12 |
பாட்னா | 40 | 13 | 53 | 19 | 13 | 32 |
பஞ்சாப்- ஹரியானா | 64 | 21 | 85 | 28 | 10 | 38 |
ராஜஸ்தான் | 38 | 12 | 50 | 15 | 12 | 27 |
சிக்கிம் | 03 | 0 | 03 | 0 | 0 | 0 |
தெலங்கானா | 18 | 06 | 24 | 04 | 06 | 10 |
திரிபுரா | 04 | 01 | 05 | 0 | 01 | 01 |
உத்தரகண்ட் | 09 | 02 | 11 | 03 | 01 | 04 |
மொத்தம் | 815 | 265 | 1080 | 233 | 178 | 411 |
ஆதாரம்: மத்திய சட்ட அமைச்சக வலைதளம்
ஏப்.1 நிலவரம்
தொகுப்பு: சுரேந்தா் ரவி