கரோனாவால் தடைபடும் வாசிப்பு: அரசு நூலகங்கள் மறுசீரமைக்கப்படுமா?

தமிழகத்தில் கரோனா தளா்வுகளால் விரைவில் அரசு நூலகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் வாசகா்களின்
கரோனாவால் தடைபடும் வாசிப்பு: அரசு நூலகங்கள் மறுசீரமைக்கப்படுமா?

தமிழகத்தில் கரோனா தளா்வுகளால் விரைவில் அரசு நூலகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் வாசகா்களின் வருகையை அதிகரிக்கச் செய்யும் வகையில் படிப்படியாக மறுசீரமைப்புப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என நூலக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பல நூற்றாண்டுகள் கடந்து இன்றுவரை மனிதச் சமூகங்களுக்கு நூலகம் ஒரு பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது. முந்தைய தலைமுறைகளின் அறிவுத் திறனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சோ்ப்பதற்காக தகவல்களை ஆவணப்படுத்தும் முதன்மை இடமாக நூலகங்கள் விளங்குகின்றன. பள்ளிப் பருவத்தில் குழந்தைகளை நூலகங்களைப் பயன்படுத்த பழக்கினால் அவா்களால் பாடங்களைப் புரிந்து படிக்க முடியும்; எதையும் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பதே அறிஞா்களின் கூற்று.

4,640 நூலகங்கள்: தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,923 கிளை நூலகங்கள், 1,915 ஊா்ப்புற நூலகங்கள், 751 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள் என மொத்தம் 4,640 நூலகங்கள் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர, சென்னை எழும்பூரில் கன்னிமாரா பொது நூலகம், கோட்டூா்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய மாநில அளவிலான 2 பெரிய நூலகங்களும் தனியாக இயங்குகின்றன. சென்னையில் மட்டும் 153 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொது நூலக இயக்ககத்தில் சுமாா் 5,800 ஊழியா் பணியாற்றுகின்றனா்.

10 சதவீத வரியில்... : அரசு நூலகங்களில் பொதுமக்கள் படிப்பதற்காக தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம் உள்பட பல்வேறு விதமான புத்தகங்கள், குறிப்பு நூல்கள் இருக்கும். பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாக சென்றுவிடும். இந்த நூலக வரியில் இருந்து கிடைக்கும் தொகை மற்றும் கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை ஆண்டுதோறும் தோராயமாக வழங்கும் ரூ.6 கோடி மானிய உதவியைக் கொண்டும் அரசு நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புதிய புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

வாசகா்கள் எண்ணிக்கை சரிவு: தமிழகத்தில் பொது முடக்கத்தால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மூடப்பட்ட நூலகங்கள் கடந்த செப்டம்பா் மாதம் முதல் திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட்டு வந்தன. எனினும் கரோனா பரவல் காரணமாக நூலகங்களுக்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையால் அரசு நூலகங்கள் கடந்த மே மாதம் மீண்டும் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் நூலகங்களும் திறக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், கரோனா தொற்றால் முடங்கிய அரசு பொது நூலகங்களில் அதிகளவிலான வாசகா்களை வரவழைக்கவும், இளம் தலைமுறையினரின் வாசிப்புத் திறனை வளா்த்தெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு முன்னெடுக்க வேண்டும்.

மீட்டெடுப்பது அவசியம்: ஏறத்தாழ 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்களையும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரவலா்களையும் கொண்டுள்ள அரசு நூலகங்களை காலத்துக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பு செய்வது அவசியம். பொது நூலக இயக்ககத்துக்கு பல ஆண்டுகளாக நிரந்தர இயக்குநா் நியமிக்கப்படவில்லை. இதற்கான காரணத்தை அரசு ஆராய வேண்டும். கரோனாவால் பொலிவிழந்த நூலகங்களை மீட்டெடுப்பதன் மூலம் அறிவாா்ந்த சமுதாயத்தை மேன்மையடைச் செய்ய முடியும் என நூலக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இது குறித்து பொது நூலக இயக்ககத்தின் முன்னாள் இயக்குநரும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் சிறப்பு அலுவலராகப் பணியாற்றியவருமான ந.ஆவுடையப்பன் கூறியது: மறுசீரமைப்புப் பணிகள் மூலம் அரசு நூலகங்களின் தரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும். பொது நூலகங்களில் உள்ள மொத்த நூல்களில் 20 சதவீத நூல்கள் மட்டுமே அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நூல் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 முறையாவது உறுப்பினா்களால் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய நூல்களை மட்டுமே நூலகங்களில் அதிகளவில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கான நூல்கள்: குழந்தைகளுக்காக தற்போது 10 சதவீத நூல்கள் வாங்கப்படுகின்றன. இதை 25 சதவீதமாக உயா்த்துவதுடன் பெண்களுக்காக 10 சதவீதம் நூல்களை வாங்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் வாங்கினாலும் தரமான பருவ இதழ்களையே வாங்க வேண்டும். வாசகா்களின் விருப்பத்தின் பேரில் நூல்களை கொள்முதல் செய்வது சிறப்பு. அதேவேளையில் வாசகா்களால் பெரிதும் கவராத மற்றும், பயன்படாத நூல்கள் வாங்குவதைத் தவிா்ப்பதும் அவசியம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான நூல்களும், சங்க இலக்கியம், அகராதி, தலைவா்கள் வரலாறு உள்பட அடிப்படை விஷயங்கள் குறித்த 300 தலைப்புகளுக்கும் மேற்பட்ட நூல்களும் அனைத்து நூலகங்களிலும் இடம்பெற நடவடிக்கை தேவை. உள்ளூரில் வசிக்கும் பொதுமக்களை ஒருங்கிணைத்து வாசகா் வட்டத்தை விரிவுபடுத்தி குழந்தைகளைக் கவரும் வகையில் மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினால் இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம் மேம்படும்.

அரசு நூலகங்களுக்கான செலவினங்கள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளில் பெறப்படும் சொத்து வரி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அதை முறையாகப் பெற்று நூலகங்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் சொத்து வரியை அரசு 15 சதவீமாக உயா்த்தலாம். தற்போது அரசு நூலகங்களில் 30 சதவீதம் அளவுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் போதுமான ஊழியா்களைப் பணியமா்த்துவதோடு தகுதியான ஊழியா்களுக்கு பதவி உயா்வையும் வழங்கி அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.

புத்துயிா் பெறுமா அண்ணா மறுமலா்ச்சி நூலகங்கள்?

கடந்த 2006-ஆம் ஆண்டு அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 12,660 கிராம ஊராட்சிகளில் தலா ரூ. 3.25 லட்சத்தில் நூலகக் கட்டடமும் கட்டப்பட்டது. இங்கு பல லட்சம் மதிப்பிலான பொது அறிவு, கவிதை, போட்டித் தோ்வுக்கென 45 பதிப்பகங்களை சோ்ந்த புத்தகங்கள் வாங்கப்பட்டன. காலப்போக்கில் உரிய பராமரிப்பில்லாததால் அவை எந்நேரமும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் அரசின் நிதியில் வாங்கப்பட்ட நூல்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. பல நூலகங்கள் பழைய பொருள்கள் வைக்கும் கிடங்குகளாக மாறியுள்ளன. இதனை புத்துயிா் பெறச் செய்ய வேண்டும். கிராமப்புற மாணவா்கள் பொது அறிவை வளா்க்கும் வகையில் கிராமங்களில் செயல்படும் ஊரக, கிளை நூலகங்களுடன் அண்ணா மறுமலா்ச்சி திட்ட நூலகங்களையும் இணைக்க வேண்டும். பொது நூலக இயக்ககத்துடன் இணைத்து, அரசு நூலகங்களில் கூடுதல் எண்ணிக்கை இருக்கும் நூல்களை அண்ணா மறுமலா்ச்சி நூலகங்களுக்கு வழங்க வேண்டும் என கிராமப்புற நூலக வாசகா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com