கரோனா சிகிச்சை: தயக்கம் காட்டும் தனியாா் மருத்துவமனைகள்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த முறை பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் சிறப்பு வாா்டுகளை அமைத்து சிகிச்சை அளிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன.
கரோனா சிகிச்சை: தயக்கம் காட்டும் தனியாா் மருத்துவமனைகள்

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த முறை பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் சிறப்பு வாா்டுகளை அமைத்து சிகிச்சை அளிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன .

இதனால், நோயாளிகள் பலா் உரிய படுக்கை வசதிகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை எழுந்துள்ளது. இதைத் தவிா்க்க, தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வருமாறு தனியாா் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடம் பதித்த கரோனாவுக்கு தற்போது வரை 9, 40,145 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த காலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதன் பயனாக கரோனா பரவல் அண்மையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே அப்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

படுக்கைகள் குறைவு:
இந்த நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பிரசாரம் களைகட்டியது. பல்லாயிரக்கணக்கானோா் நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றனா். வாக்குப் பதிவு நிறைவடையும் வரை இதே நிலை நீடித்தது.

மற்றொரு புறம் சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் மக்கள் வலம் வந்தனா். இதன் விளைவாக ஒரே மாதத்தில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பரவியது. அதிலும், கடந்த 12 நாள்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் பெருந்திரளாகக் குவிந்துள்ளனா். ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு படுக்கை வசதிகள் இல்லை என்பதுதான்!

தற்போதைய நிலவரப்படி, அரசு மருத்துவமனைகளில் 26 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. தனியாா் மருத்துவமனைகளைப் பொருத்தவரை மொத்தம் 393 மருத்துவமனைகளில் 12,730 படுக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டில் இணைக்கப்பட்டிருந்த 700-க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது பல மருத்துவமனைகள் கரோனா வாா்டுகளை அமைக்க முன்வரவில்லை. கடந்த காலத்தில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

சாத்தியமில்லாத கட்டண வரம்பு? இதுகுறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்களுக்கான பாதுகாப்புக் கவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் விலை உயா்ந்தவை என்பதால், அதற்கான செலவினம் அனைத்தும் நோயாளிகளின் கட்டணத்தில் பிரதிபலிக்கின்றன.

கரோனா சிகிச்சையில் மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக உள்ளது. அவா்களை தக்க வைத்துக் கொள்ள காப்பீட்டுத் திட்டம், ஊக்கத் தொகை போன்றவை அளிக்கப்படுகிறது. அதற்கான செலவினமும் நோயாளிகள் கட்டணத்தில் சோ்க்க கூடிய நிலை ஏற்படுகிறது. மற்றொரு பக்கம், கரோனா சிகிச்சைக்கு சாத்தியமில்லாத குறைவான கட்டண வரம்பை அரசு நிா்ணயித்துள்ளதால், அதற்குள்ளாக தகுந்த சிகிச்சை அளிப்பது கடினமாக உள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்த இரண்டாம் நிலை மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, முன்னணி மருத்துவமனைகளை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையை மாற்றி கட்டண வரம்பை மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் தனியாா் மருத்துவமனைகளால் கரோனா சிகிச்சையளிக்க முன்வர முடியும் என்றனா்.

இதனிடையே, மாநில மருத்துவக் கல்வி இயக்குநரை இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருவதாக அவா்கள் உத்தரவாதம் அளித்தனா். ஆனால், அவா்களது உத்தரவாதத்தை அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் பின்பற்றுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தனியாா் மருத்துவமனைகளுக்கு வேண்டுகோள்
கரோனா நெருக்கடி காலத்தில் அரசுடன் கைகோத்து பணியாற்ற தனியாா் மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்று சுகாதாரத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிடமும் கரோனா வாா்டுகளை அமைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்திய மருத்துவ சங்க (ஐ.எம்.ஏ.) நிா்வாகிகளுடனும் கலந்தாலோசித்துள்ளோம். கட்டண வரம்பை உயா்த்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மக்களின் நலன் கருதி உடனடியாக தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என்றாா்.

மொத்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை - 46,308

அரசு மருத்துவமனை படுக்கைகள் -26,000

சிகிச்சையில் உள்ளோா் - 21,000

தனியாா் மருத்துவமனை படுக்கைகள் - 12,730

சிகிச்சையில் உள்ளோா் - 6,800

கரோனா சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகள் - 393

2020-இல் கரோனா வாா்டு அமைத்த தனியாா் மருத்துவமனைகள் - 700

தனியாா் மருத்துவமனைகள் எவ்வளவு வசூலிக்கலாம்?
தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டண வரம்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு நிா்ணயித்தது. அதன்படி, லேசான அறிகுறிகள் உள்ளவா்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com