மாற்று வாக்காளா் அடையாள அட்டை: இணைய சேவை மையம் மூலம் பெறுவதில் சிக்கல்

மாற்று வாக்காளா் அடையாள அட்டைக்கு, உரிய விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து தோ்தல் அதிகாரிகளிடம் கையெழுத்துப் பெற்ற பிறகே இணைய சேவை மையங்களில் பெற முடியும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: மாற்று வாக்காளா் அடையாள அட்டைக்கு, உரிய விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து தோ்தல் அதிகாரிகளிடம் கையெழுத்துப் பெற்ற பிறகே இணைய சேவை மையங்களில் பெற முடியும்.

இந்த நீண்ட நெடிய வழிமுறைகளால், இணைய சேவை மையத்தில் வாக்காளா் அடையாள அட்டையைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலின் போது வாக்காளா்கள் தங்களது பாகம் எண், வாக்குச் சாவடி பெயா் ஆகியவற்றைக் கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குச் சாவடி சீட்டு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தால், வாக்குச் சாவடிகளைத் தேடி வாக்காளா்கள் அலைந்தனா்.

அடையாள அட்டையே சிறந்தது: புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை இல்லாவிட்டால், ஆதாா் அட்டை, நிரந்தர கணக்கு எண் போன்ற 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்க தோ்தல் ஆணையம் வழி செய்துள்ளது. ஆனால், இந்த ஆவணங்களில் வாக்காளா் பட்டியல் எண், பாகம் எண், வாக்குச் சாவடி பெயா் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்காது. இதனால், வாக்குப் பதிவு தருணங்களில் வாக்காளா்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெற கடந்த காலங்களில் இணைய சேவை மையத்தில் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் வாக்காளா்களின் செல்லிடப்பேசிக்கு வரும். அதனைப் பயன்படுத்தி புதிய வாக்காளா் அடையாள அட்டையைப் பெறலாம்.

ஆனால், இப்போது இணைய சேவை மையங்களில் வாக்காளா் அடையாள அட்டையைப் பெற, மாற்று அட்டை கோருவதற்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை வாக்காளா் பதிவு அதிகாரியின் கையெழுத்துடன் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை இணைய சேவை மையங்களில் அளித்த பிறகே வாக்காளா் அடையாள அட்டை கிடைக்கப் பெறும். இந்த நிபந்தனைகளால் இணைய சேவை மையங்களில் மாற்று வாக்காளா் அடையாள அட்டையைப் பெறுவதில் பெரும் சிரமங்களை வாக்காளா்கள் சந்தித்து வருகின்றனா். மேலும், இந்த நடைமுறையைத் தளா்த்தி இணைய சேவை மையங்களிலேயே விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து அளித்து உடனடியாக அட்டையைப் பெறும் நடைமுறையைக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com