வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கம்: விவசாயிகள் அதிர்ச்சி

நெல், நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிக சந்தைக் கட்டணம் வசூலித்துக் கொடுத்த பருத்தியை, வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு
வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கம்: விவசாயிகள் அதிர்ச்சி


திண்டுக்கல்: நெல், நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிக சந்தைக் கட்டணம் வசூலித்துக் கொடுத்த பருத்தியை, வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களுக்கு 1 சதவீத சந்தைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிகம் விளையும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அல்லது அந்த உற்பத்திப் பொருளுக்கு தகுந்த விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து சுமார் 16 கி.மீட்டர் சுற்றளவிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், விற்பனைக்கு வரும் விளைபொருள்களுக்கு வியாபாரிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் வெளியிடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் விளைபொருள்களையும் வெளிப்படையாகத் தெரிவித்து 1 சதவீத சந்தைக் கட்டணத்தை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்தப் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியை செலுத்தும் வியாபாரிகள், 1 சதவீத சந்தைக் கட்டணத்தை செலுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி தந்து கொண்டிருந்த பருத்தியை, தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்திலிருந்து நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வியாபாரிகளுக்கு மட்டுமே சாதகமான இந்த சட்டத் திருத்தம், விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மாத இடைவெளியில் முழு விலக்கு: தமிழகத்தில் திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பருத்தி உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதேபோல், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களும் பருத்தி சாகுபடியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ், நூலிழைகள் என்ற பிரிவின் கீழ் பருத்திக்கு கபாஸ், லின்ட், கழிவு என்ற 3 பிரிவுகளில் சந்தைக் கட்டணமாக 1 சதவீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு 50 கிலோவுக்கு கூடுதலான பருத்திப் பஞ்சையும், 100 கிலோவுக்கு கூடுதலான கழிவுப் பஞ்சையும், 150 கிலோவுக்கு கூடுதலான கபாஸ் (விதை நீக்காத பருத்தி) எடுத்துச் செல்லும்போதும் இந்த 1 சதவீத கட்டணம் வசூலிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், லின்ட் (விதை நீக்கப்பட்ட பஞ்சு), கழிவு (கழிவு பஞ்சு) ஆகியவற்றுக்கு சந்தைக் கட்டணத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்தொடர்ச்சியாக 2 மாத இடைவெளியில், பருத்திக்கும் (கபாஸ்) சந்தைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து கடந்த 20 நாள்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பருத்தி வேளாண் விளைபொருள் இல்லையா?: தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் நூலிழைகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த பருத்தியை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதன் மூலம், பருத்தி இனி வேளாண் விளைபொருள் கிடையாதா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நெல், நிலக்கடலைக்கு அடுத்தப்படியாக பருத்தி மூலமாக மட்டுமே தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வரும் நிலையில், வியாபாரிகளின் நலனுக்காக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் இரா.சச்சிதானந்தம் கூறியதாவது:

மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதுபோன்ற சூழலில், பருத்திக்கு சந்தைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் முடிவாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் குறைவான உற்பத்தி இருந்தாலும் கூட, சந்தைக் கட்டண வசூல் அமலில் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும்; இல்லாத நிலையில், வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வார்கள். இதனைத் தடுக்கும் வகையில் பருத்திக்கு விலக்கு அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் வருமானம் ஈட்டக் கூடிய பணப் பயிராக உள்ள பருத்திக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் நியாயமான விலை கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com